» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய இந்தியா: முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி!

வெள்ளி 3, நவம்பர் 2023 10:31:33 AM (IST)



ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. தில்ஷான் மதுஷங்கா வீசிய முதல் பந்தில் பவுண்டரி அடித்த கேப்டன் ரோஹித் சர்மா (4), அடுத்த பந்தில் ஆஃப் ஸ்டெம்பை பறிகொடுத்தார். இதன் பின்னர் களமிறங்கிய விராட் கோலி, ஷுப்மன் கில்லுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.

தொடக்க ஓவர்களில் இந்த ஜோடி சற்று தடுமாறியது. ஆனால் களத்தில் நிலை பெற்ற பின்னர் இருவரும் மட்டையை சுழற்றத் தொடங்கினர். விராட் கோலி 50 பந்துகளில் தனது 70-வது அரை சதத்தையும், ஷுப்மன் கில் 50 பந்துகளில் தனது 11-வது அரை சதத்தையும் கடந்தனர். அபாரமாக விளையாடி வந்த ஷுப்மன் கில் 92 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் விளாசிய நிலையில் தில்ஷான் மதுஷங்கா வீசிய ஆஃப் கட்டரை தேர்டு மேன் திசையை நோக்கி அடிக்க முயன்ற போது விக்கெட் கீப்பர் குஷால் மெண்டிஷிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

2-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் இணைந்து 189 ரன்கள் சேர்த்தார் ஷுப்மன் கில். சச்சினின் 49 சதங்கள் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 94 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் எடுத்த நிலையில் தில்ஷான் மதுஷங்கா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். வேகம் குறைத்து அவர் வீசிய ஆஃப் கட்டரை மட்டைக்கு வருவதற்கு முன்னதாகவே விராட் கோலி அடிக்க முயன்ற போது பதும் நிஷங்காவிடம் எளிதாக கேட்ச் ஆனது.

இதன் பின்னர் களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர், இலங்கை அணியின் பந்து வீச்சை கடும் சிதைவுக்கு உட்படுத்தினார். மறுபுறம் நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் 21, சூர்யகுமார் யாதவ் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். தனது 16-வது அரை சதத்தை கடந்த ஸ்ரேயஸ் ஐயர் 56 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசிய நிலையில் தில்ஷான் மதுஷங்கா பந்தை விளாசிய போது எக்ஸ்டிரா கவர் திசையில் தீக்சனாவிடம் கேட்ச் ஆனது.

இறுதிக்கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா 24 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். மொகமது ஷமியும் 2 ரன்களில் ரன் அவுட் முறையில் வெளியேறினார். முடிவில் 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. ஜஸ்பிரீத் பும்ரா ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி சார்பில் தில்ஷான் மதுஷங்கா 10 ஓவர்களை வீசி 80 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

358 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணியானது இந்திய வேகப்பந்து வீச்சில் தொடக்கத்திலேயே கடும் சரிவை சந்தித்தது. ஜஸ்பிரீத் பும்ரா வீசிய முதல் பந்திலேயே பதும் நிஷங்கா (0), எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை வீசிய மொகமது சிராஜ் முதல் பந்தில் திமுத் கருணரத்னேவை (0) வெளியேற்றினார். தொடர்ந்து 5-வது பந்தில் சதீரா சமரவிக்ரமா (0) 3-வது சிலிப் திசையில் நின்ற ஸ்ரேயஸ் ஐயரிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார்.

மொகமது சிராஜ் தனது அடுத்த ஓவரில் கேப்டன் குஷால் மெண்டிஸை (1), ஸ்டெம்புகள் சிதற பெவிலியனுக்கு அனுப்ப இலங்கை அணி அதிர்ச்சியில் உறைந்தது. அந்த அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்களை பறிகொடுத்த நிலையில் மொகமது ஷமி தனது விக்கெட் வேட்டையை தொடங்கினார். சரித் அசலங்கா (1), துஷான் ஹேமந்தா (0), துஷ்மந்தா சமீரா (0), ஏஞ்சலோ மேத்யூஸ் (12), கசன் ரஜிதா (14) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார் மொகமது ஷமி.

கடைசி வீரராக தில்ஷான் மதுஷங்கா 5 ரன்களில் ஜடேஜா பந்தில் வெளியேற இலங்கை அணி 19.4 ஓவர்களில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் மொகமது ஷமி 5 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 18 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். மொகமது சிராஜ் 7 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் 16 ரன்களை வழங்கி 3 விக்கெட்களை கைப்பற்றினார். ஜஸ்பிரீத் பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இது 7-வது வெற்றியாக அமைந்தது.

நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காமல் வலம் வரும் இந்திய அணி 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியதுடன் முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேவேளையில் 7 ஆட்டங்களில் 5-வது தோல்வியை சந்தித்த இலங்கை அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏறக் குறைய இழந்தது. இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 5-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory