» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனி, பிளெம்மிங்கிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஷேன் வாட்ஸன் உருக்கம்

புதன் 24, ஏப்ரல் 2019 5:32:27 PM (IST)சிஎஸ்கே கேப்டன் தோனியும், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கும் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று ஷேன் வாட்ஸன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னரும் ஜானி பர்ஸ்டவ்வும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். 2 பந்துகளை எதிர்கொண்டிருந்த பர்ஸ்டவ் ஹர்பஜன் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்துவிட்டு ரன் ஏதும் அடிக்காமல் வெளியேறினார். வார்னருடன் மனிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். 

இருவரும் 45 பந்துகளில் 57 ரன்கள் சேர்ந்தபோது, வார்னர், ஹர்பஜன் வீசிய பந்தில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 4ஆவது வீரராக விஜய் சங்கர் 20 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து வெளியேறினார். யூசுஃப் பதான் 5 ரன்கள் அடித்த நிலையில் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஹர்பஜன், வார்னர் விக்கெட்டைக் கைப்பற்ற இன்னும் சற்று தாமதமாகியிருந்தால் ஹைதராபாத் அணியின் ஸ்கோர் மேலும் அதிகரித்திருக்கக்கூடும்.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. டு ப்ளஸிஸ் ஒரு ரன்னில் வெளியேற வாட்ஸன், ரெய்னா இருவரும் அதிரடியில் ஈடுபட்டனர். இதனால் ரன் ரேட் பின்னர் வேகமாக உயர்ந்தது. 38 ரன்களில் ரெய்னா ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸன் 53 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவர் 9 பவுண்டரிகளையும், 6 சிக்ஸர்களையும் பறக்க விட்டார். இதனால் ஆட்டம் சென்னை அணிப் பக்கம் எளிதில் மாறியது. வாட்ஸன் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 


சன்ரைசர்ஸ் அணியின் 175 ரன்களை இலக்கை வெற்றிகரமாக விரட்டி வெற்றியைப் பெற தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்ஸன் முக்கிய துணையாக இருந்தார். இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள வாட்ஸன் இந்த போட்டியிலும் சொல்லிக்கொள்ளும் வகையில் விளையாடவில்லை.  இந்த ஐபிஎல் போட்டியில் வாட்ஸனின் அதிகபட்சமே 44 ரன்கள் மட்டுமே இருந்தது. தொடர்ந்து இதுபோல் விளையாடினால், வாட்ஸனுக்கு பதிலாக சாம்பில்லிங்ஸை களமிறக்கலாம் என்றுகூட யோசனை முன்வைக்கப்பட்டது.
 ஆனால் வாட்ஸன் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்த கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளெம்மிங் ஆகியோர் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்பளித்தனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் வாட்ஸன் ஆட்டத்தின் பெரும்பகுதி ரன்களை எடுத்து வெற்றிக்கு துணையாகினார்.

வெற்றிக்குப் பின் ஷேன் வாட்ஸன் ஊடகங்களிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், "என் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்தும் ரன்கள் சேர்க்கமுடியவில்லை என்பதற்காகத்தான். அதைத்தவிர வேறேதும் இல்லை. ஆனால், என் மீது கேப்டன் தோனியும், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கும் தீவிரமான நம்பிக்கை வைத்திருந்தனர், அவர்கள் வைத்த நம்பிக்கைக்கு என்னால் வார்த்தையால் நன்றி சொல்ல முடியாது எனத் தெரிவித்தார்.

வாட்ஸன் குறித்து தோனி கூறுகையில், "சில போட்டிகளில் ஒரு தனிபேட்ஸ்மேனே ஏராளமான பங்களிப்புகளை செய்ய முடியும் என்று நம்புகிறேன், மற்ற வீரர்கள்தான் சிறிதளவு செய்தால் போதும். அந்த வகையில் எங்களுக்கு மேட்ச் வின்னர் வாட்ஸன். வலைபயிற்சியில் சிறப்பாகச் செயல்பட்டார் வாட்ஸன். எந்த ஒரு சிறிய இன்னிங்ஸில் அவர் விளையாடினாலும், சிறிது தொடக்கத்தில் தடுமாறினாலும் அதன்பின் நிலைத்துவிடுவார். வாட்ஸன் ஃபார்முக்கு வந்துள்ள நேரம் சரியானது. இன்னும் அதிகமான வாய்ப்புகளே வாட்ஸனுக்கு நிர்வாகம் வழங்கும் என நம்புகிறேன் " எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory