» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கணவனைத் தேடும் மனைவியின் கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்: குட்டிக்கதைக்கு உதயநிதி பதிலடி!

செவ்வாய் 23, ஜூன் 2026 3:31:12 PM (IST)



சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய பதிலுரை திட்டமிடப்பட்ட அவதூறுகள் நிறைந்தது என்றும், குட்டிக்கதை என்ற பெயரில் அவர் பேசியது அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்!

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் ஒரு குட்டிக்கதையைக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்குப் பதிலுரை என்ற பெயரில் திட்டமிடப்பட்ட அவதூறுகளை அள்ளிவீசி முதலமைச்சர் தனது நடிப்புத் திறனைக் காட்டியுள்ளார் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பேரவையின் நேரலை கேமராவை சினிமா கேமரா என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி ஒரே முறையில் (சிங்கிள் ஷூட்) படம் பிடிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல என அவர் சாடியுள்ளார்.

முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும், பஞ்ச் டயலாக்குகளும் மட்டும்தான் இருந்ததே தவிர, மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சினை, மோசமாகி இருக்கும் சட்டம் - ஒழுங்கு மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்தப் பதிலும் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகளின் தூண்டுதலில்தான் விவசாயிகள் போராடுவதாகக் கூறி, விவசாயிகளை முதலமைச்சர் கொச்சைப்படுத்தியது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குட்டிக்கதைக்குக் கண்டனம்: பேரவையில் முதலமைச்சர் குட்டிக்கதை சொல்கிறேன் என்று உளறியது அவை மாண்புக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கணவனைத் தேடும் மனைவியின் கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும் என்று சாடியுள்ளார். எனவே, நடிகர் விஜய் என்பதை மறந்து, இனியாவது தமிழ்நாட்டின் முதலமைச்சராக அவர் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory