» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் விஜய் பேரவை மரபோடு நடந்து கொள்ள வேண்டும்: நயினார் நாகேந்திரன் அறிவுரை!

செவ்வாய் 23, ஜூன் 2026 3:26:41 PM (IST)

தமிழக முதலமைச்சர் விஜய் இனிமேலாவது அவர் தனது தகுதியை அறிந்து பேரவை மரபோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்!

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் மற்றும் அமைச்சர் நிர்மல்குமாரின் கருத்துக்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் காட்டிய சைகை குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் சினிமாவில் நடிப்பது போலவே நினைத்துக் கொண்டு பேரவையிலும் செயல்படுகிறார் என்றார். சட்டமன்ற மரபுப்படி இதுபோன்ற சைகைகளைக் காட்டக் கூடாது என்றும், முன்பு இவ்வாறு செய்தவர்களின் நிலை என்னவானது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்ட அவர், இனிமேலாவது முதலமைச்சர் பேரவை மரபைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற முடியாது எனக் கூறும் அமைச்சர் நிர்மல்குமார், சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ நீடிக்கத் தகுதி இல்லாதவர் என்று சாடினார். அவர் சட்டம் படித்துள்ளாரா என்று தெரியவில்லை எனக் குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், நிர்மல்குமார் முன்பு பாஜகவிலும், பின்னர் அதிமுகவிலும் இருந்துவிட்டு தற்போது தவெகவில் இருக்கிறார் என்றும், அடுத்த வருடம் எந்தக் கட்சிக்குச் செல்வார் எனத் தெரியாது என்றும் விமர்சித்தார்.

முதலமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் மாளிகைக்கு எத்தனை முறை சென்றீர்கள் எனக் கேள்வி எழுப்பிய அவர், சட்டம் சரியாகப் படிக்காததாலும் எழுதத் தெரியாததாலும்தான் ஆளுநர் திருப்பி அனுப்பினார் என்று குறிப்பிட்டார். முதலமைச்சரைப் பதவியேற்க விடுங்கள் என நிர்மல்குமார் யாருக்கெல்லாம் தொலைபேசியில் அழைத்துச் சொன்னார் என்பதைத் தான் சொல்லட்டுமா எனக் கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன், அப்போது மட்டும் பாஜக இனிக்கிறதா என்று சாடினார்.

சட்டப்பேரவையில் தேவையான விஷயங்களை மட்டும் பேசுமாறு அறிவுறுத்திய அவர், கடந்த ஆட்சியில் மின்வெட்டுப் பிரச்சினைக்கு அணில் காரணம் என்று சொன்னார்கள், தற்போது இந்த ஆட்சியில் குரங்கு காரணம் என்று சொல்கிறார்கள் என எள்ளி நகையாடினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory