» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டுக்கு ஆபத்து எப்போதும் வடக்கிலிருந்துதான் வரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 12:54:58 PM (IST)

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, திருவள்ளூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டின் வடக்கு வாசலாக இருக்கும் திருவள்ளூருக்கு நான் வந்திருக்கிறேன். தொழிற்சாலைகள் நிறைந்து, தொழில் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் இந்தப் பகுதிக்கு வந்ததில் மகிழ்ச்சி. தமிழ்நாடு எப்போதுமே ஒரு தனித்துவமான மாநிலம்; அதற்குக் காரணம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்.

"உங்களுக்கு நன்றாகத் தெரியும், பெரும்பாலும் தமிழ்நாட்டின் கிராமத் தெய்வங்கள் வடக்கு நோக்கித்தான் அமர்ந்திருக்கும். ஏன் தெரியுமா? தமிழ்நாட்டுக்கு ஆபத்து எப்போதும் வடக்கிலிருந்துதான் வரும் என்பதுதான் அதற்குக் காரணம். 

எதிர்வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற ஆபத்தைத் தடுத்து நிறுத்தும் தேர்தல்தான் இது. இதே திருவள்ளூரில் நின்றுதான் ஒன்றிய பாஜக அரசை நோக்கி நான் சவால் விட்டேன்: 'எத்தனை ஏவல் அமைப்புகளை வேண்டுமானாலும் துணைக்கு அழைத்துக்கொண்டு வாருங்கள், தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் (Out of Control) தான்' என்று. அந்தச் சவாலில் தமிழ்நாடு வெற்றிபெற வேண்டும் என்றால் திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும். திராவிட மாடல் 2.0 ஆட்சியை நாம் அமைத்தே ஆக வேண்டும்."

ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்த அதிமுக ஆட்சியை விமர்சித்த அவர், "அடிமை அதிமுக ஆட்சி செய்த காலத்தில் தமிழ்நாடு எத்தகைய தலைக்குனிவைச் சந்தித்தது என்று நினைத்துப் பாருங்கள். தினந்தோறும் ஒரு கோமாளிக் கூத்தை அரங்கேற்றுவார்கள். திறனற்ற நிர்வாகத்தால் மக்களை இன்னலுக்குள்ளாக்கி, வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளினார்கள்" என்றார்.

அதிமுக மற்றும் பாஜக இடையிலான உறவு குறித்துப் பேசுகையில்:     பங்கு போட்ட கதை: "ஆப்பத்தை குரங்கு பங்கிட்ட கதையைப்போல, இப்போது பாஜகவினர் அதிமுகவைப் பங்கிட்டுக் கொடுக்கிறோம் என்று வந்துள்ளனர். பழனிசாமி எனும் அடிமையை அடையாளம் கண்டு, அவரை பாஜகவின் கிளைச் செயலாளராக நியமித்திருக்கிறார்கள்."

தனக்குப் பதவி கிடைத்தால் போதும், சம்பந்திக்கு வருமான வரிச் சோதனை நடக்காமல் இருந்தால் போதும் என்பதற்காகப் பழனிசாமி கொடுத்த விலைதான் தமிழ்நாட்டின் உரிமைகள். இருக்க இடம் கொடுத்தால் மடத்தைக் கேட்பான் என்பதுபோல, பழனிசாமி இருக்கும் தைரியத்தில்தான் 'அதிமுகவை வைத்து என்.டி.ஏ ஆட்சி நடத்துவோம், இந்தியைத் திணிக்கும் மும்மொழித் திட்டத்தைச் செயல்படுத்துவோம்' என்று பாஜகவினர் இஷ்டத்துக்குப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




Thoothukudi Business Directory