» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலை போராட்டத்தில் காவல்துறை அராஜகம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 8:34:14 PM (IST)

கோவில்பட்டி மந்திதோப்பு சாலையை உடனடியாகச் சீரமைக்க வலியுறுத்தி நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதற்கும் அத்துமீறலில் ஈடுபட்டதற்கும் தூத்துக்குடி மாவட்டக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவில்பட்டியில் கடந்த 4 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள மந்திதோப்பு சாலை குண்டும் குழியுமாகக் காணப்படுவதால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். இச்சாலையில் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்; 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இச்சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி முதலமைச்சருக்கு 1,000-க்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம், கடையடைப்பு, கருப்புக்கொடிப் போராட்டம் எனப் பல்வேறு ஜனநாயக வழிப் போராட்டங்கள் நடத்தப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக, இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜனநாயக முறையில் நடைபெற்ற இப்போராட்டத்தின் போது காவல்துறையினர் அராஜக முறையில் செயல்பட்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாகச் சிபிஎம் குற்றம்சாட்டியுள்ளது. சிபிஎம் தூத்துக்குடி மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளருமான தோழர் கு. ரவீந்திரன் அவர்களிடம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வானமலை அராஜகமாக நடந்து கொண்டு, அவரது சட்டையைக் கிழித்துத் தாக்குதல் நடத்தியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட காவல் அதிகாரிகள்  டிஎஸ்பி ஜெகநாதன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வானமலை, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன்,அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, காவல் உதவி ஆய்வாளர் நியூட்டன் ஆகியோர் மீது உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

காவல்துறையின் அடக்குமுறைக்கும் அச்சுறுத்தலுக்கும் அஞ்சப்போவதில்லை என்றும், மந்திதோப்பு சாலை சீரமைக்கப்பட்டுப் பகுதி மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுடன் இணைந்து ஜனநாயகப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory