» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.77 கோடி சமரசத் தொகை வழங்கல்!
சனி 13, ஜூன் 2026 9:33:23 PM (IST)

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர் (பொறுப்பு) எம். தாண்டவன் தலைமையில் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. பொதுமக்களின் நீண்டகால வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆக மொத்தம் 13 அமர்வுகள் (Benches) அமைக்கப்பட்டிருந்தன.
இதன்படி தூத்துக்குடியில் 4 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூரில் 2 அமர்வுகளும், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய தாலுகா நீதிமன்றங்களில் தலா ஒரு அமர்வும் அமைத்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த அமர்வுகளில் சமாதானமாகச் செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்ப நல மற்றும் மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் வங்கிச் சொத்துக்கடன் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு நிலுவை வழக்குகள் விசாரணை செய்யப்பட்டன.
இம்மக்கள் நீதிமன்றத்தில் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எம். பீரித்தா, பிசிஆர் நீதிமன்ற நீதிபதி ஆர். வஷீத் குமார், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எம். வீரணன் மற்றும் ஏனைய சார்பு, மாவட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர். மேலும், காப்பீட்டு நிறுவன மேலாளர்கள், பல்வேறு வங்கிகளின் மேலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், காவல் துறையினர் மற்றும் வழக்காடிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
தீர்வு காணப்பட்ட வழக்குகளின் முழு விபரம்:
• வங்கி வாராக்கடன் வழக்குகள்: மொத்தம் 345 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அதில் 129 வழக்குகளுக்குச் சமரசத் தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த தீர்வுத் தொகை ₹3,81,87,854 ஆகும்.
• நீதிமன்ற நிலுவை வழக்குகள்: பல்வேறு நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 3,704 வழக்குகள் தணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 2,996 வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் மொத்த தீர்வுத் தொகை ₹4,96,09,126 ஆகும்.
ஒட்டுமொத்தச் சாதனை விவரம்
மொத்தம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்குகள் 4,049
சமரச முறையில் தீர்க்கப்பட்ட வழக்குகள் 3,125
வழங்கப்பட்ட ஒட்டுமொத்தத் தீர்வுத் தொகை ரூ.8,77,96,980
இதன்படி, இன்று ஒரே நாளில் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 4,049 வழக்குகள் பரிசீலிக்கப்பட்டு, 3,125 வழக்குகளில் சுமுகத் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிகளுக்குக் கிடைத்த ஒட்டுமொத்தச் சமரசத் தீர்வுத் தொகை எட்டு கோடியே எழுபத்தி ஏழு லட்சத்து தொன்னூற்று ஆறாயிரத்து தொள்ளாயிரத்து எண்பது ரூபாய் ஆகும்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான முழுமையான ஒருங்கிணைப்பு மற்றும் வழிகாட்டுதல் ஏற்பாடுகளை, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் முதுநிலை உரிமையியல் நீதிபதியுமான ஏ.வி. சுபாஷினி செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)

வெறும் கம்பமாக நிற்கும் செக்போஸ்ட் சிசிடிவி : ஆவணங்களின்றிப் பறக்கும் லாரிகள்!
சனி 13, ஜூன் 2026 9:21:41 PM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 16-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சனி 13, ஜூன் 2026 7:50:18 PM (IST)

நிகிலேசன்நகர் மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் : மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் மனு!
சனி 13, ஜூன் 2026 7:45:03 PM (IST)

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப் பணிகள் - ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
சனி 13, ஜூன் 2026 7:35:59 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!
சனி 13, ஜூன் 2026 12:06:32 PM (IST)









