» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட அரசு விடுதிகளில் மாணாக்கர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்!

திங்கள் 1, ஜூன் 2026 3:16:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் இயங்கும் 35 கல்வி விடுதிகளில் 2026-27 ஆண்டுக்கான மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசால் தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர மரபினர் நல மாணவ/ மாணவியர்களுக்கென மொத்தம் 35 சமூக நீதி கல்வி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 

அதன் விவரங்கள் : தூத்துக்குடி, பணிக்கநாடார் குடியிருப்பு, விளாத்திக்குளம், எட்டயபுரம், சுப்பம்மாள்புரம், கழுகுமலை, சாத்தான்குளம், காயாமொழி, குலசேகரப்பட்டினம், வேப்பன்காடு (இ) கீழராமசாமிபுரம், வெள்ளாளன்விளை, ஆனந்தபுரம், கே.தங்கம்மாள்புரம், வீரபாண்டிய பட்டிணம், மணப்பாடு, கொம்மடிக்கோட்டை, கயத்தார் ஆகிய 17 ஊர்களில் சமூக நீதி பள்ளி மாணவர் விடுதிகளும், 

தூத்துக்குடி, ஆறுமுகநேரி, கருங்குளம், காயாமொழி, எட்டயபுரம், சுப்பம்மாள்புரம், கழுகுமலை, பணிக்க நாடார் குடியிருப்பு, கொம்மடிக்கோட்டை, புதூர், பெரியசாமிபுரம், ஆனந்தபுரம், படுக்கப்பத்து ஆகிய 13 ஊர்களில் சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதிகளும், 

தூத்துக்குடி (தாளமுத்துநகர்). தூத்துக்குடி (போல்டன்புரம்), கோவில்பட்டி ஆகிய 3 ஊர்களில் சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதிகளும், கோவில்பட்டி, நாகம்பட்டி ஆகிய 2 ஊர்களில் சமூக நீதி கல்லூரி மாணவியர் விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ / மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டபடிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ / மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ / மாணவியர்களும் மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதிகள் அளிக்கப்படும். 4-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியருக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும்.

10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியருக்கு கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு NEET/JEE நுழைவுத் தேர்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும்.

விடுதிகளில் சேர்க்கைக்கான தகுதிகள்:  பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8-கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. 

தகுதியுடைய மாணவ/மாணவியர் விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 18.06.2026-க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2026-க்குள்ளும் சமர்பிக்க வேண்டும். 

மாணவ / மாணவியர்கள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. 7. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைக்களுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, பள்ளி/கல்லூரி மாணவ/ மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory