» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முன்னாள் கோவில் தர்மகர்த்தாவுக்கு அரிவாள் வெட்டு – தூத்துக்குடியில் 2பேர் கைது!

திங்கள் 1, ஜூன் 2026 11:04:16 AM (IST)

தூத்துக்குடியில் கோவில் திருவிழா முன்விரோதம் காரணமாக முன்னாள் தர்மகர்த்தாவை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்ய முயன்ற வழக்கில், 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 3 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சின்னச்சாமி மகன் கணேசன் (70). இவர் அப்பகுதியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் தர்மகர்த்தாவாக பொறுப்பு வகித்து வந்தார். இக்கோவில் நிர்வாகம் செய்வதில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் மகன் பிரபு சங்கர் என்பவருக்கும் கணேசனுக்கும் இடையே ஏற்கனவே கருத்து வேறுபாடுகளும் தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாகக் கணேசன் தனது தர்மகர்த்தா பதவியிலிருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. 

இருப்பினும், அதிலிருந்து இரு தரப்பிற்கும் இடையே நீண்ட நாட்களாகத் தீவிர முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், பத்ரகாளி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் வரவிருக்கும் ஆவணி மாத கொடை விழா நடத்துவது சம்பந்தமான அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது, விழா ஏற்பாடுகள் தொடர்பாகக் கணேசனுக்கும் பிரபு சங்கருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றிப் பலத்த தகராறு ஏற்பட்டுள்ளது. 

பின்னர் அங்கிருந்த முக்கியப் பிரமுகர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே, நேற்றிரவு முத்தையாபுரத்தில் உள்ள ஒரு டீக்கடையின் முன்பு கணேசன் நின்றுகொண்டு டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்குப் ஆயுதங்களுடன் வந்த பிரபு சங்கரின் ஆதரவாளர்களான தூத்துக்குடி சக்தி நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்த உச்சிமாகாளி மகன் பொன்ராஜ் (25), கோரம்பள்ளத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் இசக்கி (22) உட்பட 5 பேர் கொண்ட கும்பல், கணேசனைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாக அரிவாளால் வெட்டியது. 

இதில் பலத்த காயமடைந்த கணேசன் இரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே அந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. அங்கிருந்தவர்கள் பலத்த காயமடைந்த கணேசனை மீட்டு உடனடியாகச் சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்பொழுது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் துரித நடவடிக்கையால், தப்பியோடிய முதன்மை குற்றவாளிகளான பொன்ராஜ் மற்றும் இசக்கி ஆகிய 2 பேரையும் சம்பவம் நடந்த அடுத்த 10 நிமிடங்களிலேயே போலீசார் மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். 

மேலும், இது தொடர்பாகச் சட்டம்-ஒழுங்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மீதமுள்ள 3 குற்றவாளிகளைத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.  கணேசனின் மகள் தீபா, சின்னத்திரை நடிகை ஆவார். இவர் சில சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கொலை முயற்சிச் சம்பவம் முத்தையாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory