» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவி படுகொலை: சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

வெள்ளி 13, மார்ச் 2026 3:27:36 PM (IST)

வேடநத்தம் மாணவி படுகொலை தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மகள் (பிளஸ்-2 மாணவி), கடந்த 10-ஆம் தேதி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி வந்த அந்த மாணவி, கடந்த 10-ஆம் தேதி மாலை இயற்கை உபாதை கழிக்க வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உறவினர்களும் தேடியபோது, காட்டுப்பகுதியில் கழுத்து மற்றும் உடல் பகுதியில் பலத்த காயங்களுடன் மாணவி பிணமாகக் கிடந்துள்ளார்.

மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டியும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும், நேற்று காலை தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் (குறுக்குச்சாலை) உறவினர்களும் பொதுமக்களும் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 10 மணிநேரம் நீடித்த இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால், எட்டயபுரம் மற்றும் கோவில்பட்டி வழியாகப் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு நேரில் வந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) மதன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். "குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

மாணவியின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மாணவியின் கழுத்து எலும்பு உடைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதா என்பதை அறிய மாணவியின் உடற்கூறுகள் நெல்லை தடய அறிவியல் மையத்திற்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன.

கொலையாளிகளைப் பிடிக்க நெல்லை சரக டி.ஐ.ஜி. சரவணன் மேற்பார்வையில், எஸ்.பி. மதன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது சந்தேகத்தின் பேரில் 10 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory