» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விபத்தில் சிக்கியவரின் உயிரை காப்பாற்ற உதவிய போலீசாருக்கு எஸ்பி பரிசு வழங்கி பாராட்டு!

செவ்வாய் 21, செப்டம்பர் 2021 4:56:34 PM (IST)



தூத்துக்குடியில் விபத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரது உயிரை காப்பாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். 

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே 18.09.2021 அன்று மாலை 6 மணியளவில் 50 வயது மதிக்கத் தக்க ஒருவர் சாலை விபத்தில் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை சுற்றி பார்த்துக்கொண்டிருந்த 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவரை காப்பாற்ற முன் வரவில்லை. ஆனால் அந்த வழியாக வந்த தூத்துக்குடி மாவட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர்கள் சக்தி மாரிமுத்து,  டேவிட் ராஜன், சண்முகையா, சுடலைமணி மற்றும் மகேஷ் ஆகியோர் சற்றும் தாமதிக்காமல் வந்த காவல் வாகனத்திலேயே அவரை ஏற்றி மருத்துவமனை கொண்டு சென்று அனுமதித்து, அவரது உயிரைக் காப்பாற்றினர். 

இதனை அப்போது பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், தான் உட்பட அங்கு நின்று கொண்டிருந்த யாரும் அவரை காப்பாற்ற முன் வராத நிலையில் போலீசார் காப்பாற்றியது குறித்து போலீசாரின் இச் செயலை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய போலீசாருக்கு இன்று (21.09.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.

இதுபோன்று பாதிக்கப்படுபவர்களுக்கு காவல்துறை மட்டுமல்ல பொதுமக்களும் உதவுவதற்காகவே அரசு 2014ம் ஆண்டு ‘குட் சமாரிட்டன் சட்டம்” என்ற சட்டத்தை இயற்றியுள்ளது. இதன்படி இதுபோன்று பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருப்பவர்களை பொதுமக்கள் மனிதாபிமானத்தோடு, அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதிக்கலாம், உதவுபவர்கள் பெயர் மற்றும் முகவரி போன்ற விபரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை, அதே போன்று காவல்துறைக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. 

பொதுமக்களில் பலர் இதுபோன்று பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பார்கள் ஆனால் காவல்துறையால் சாட்சி, அது, இது என்று தங்களுக்கு பிரச்சனை ஏதும் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உதவ யாரும் முன்வருவதில்லை. உதவி செய்ய முடியாவிட்டாலும் அவசர மருத்துவ சிகிச்சைக்கு இலவச தொலை பேசி எண் 108ற்கோ அல்லது காவல்துறையின் இலவச அவசர உதவி எண். 100க்கோ பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். ஆகவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, அவர்களது உயிரைக் காப்பாற்ற முன்வர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து

K.ganeshan . secretary, Thoothukudi makkal vazhvathara pathukappu sangam.Sep 21, 2021 - 09:31:22 PM | Posted IP 173.2*****

எங்கள் காவல்துறைக்கு வாழ்த்துக்கள் மற்றும் இதை ஊக்குவித்த எஸ்பிக்கு நன்றி🙏🙏

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory