» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சீரான குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் முற்றுகை: கோவில்பட்டியில் பரபரப்பு

செவ்வாய் 21, மே 2019 4:01:35 PM (IST)சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எட்டயபுரம் அருகே இளம்புவனம் ஊராட்சியில் இளம்புவனம், பிதப்புரம், சோத்துநாயக்கன்பட்டி, மாதாபுரம் ஆகிய கிராமங்களில்  சுமார் 3 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு கடந்த 2014-ம் ஆண்டு சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இணைப்பு கொடுக்கப்பட்டது. அதிலிருந்து சுமார் 2 மாதங்கள் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அதன் பின்னர் குடிநீர் வழங்கப்படவில்லை. 

மேலும், இளம்புவனம் ஊராட்சி வெளியே உள்ள அய்யன்குளத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதுகுறித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால் கிராம மக்கள், கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையை கடந்து, எட்டயபுரத்துக்கு செல்லும் சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் இருந்து இரண்டு நல்லிகள் பொருத்தப்பட்டுள்ளன. 

இதில் இருந்து தான் இரவு, பகலாக கிராம மக்கள் தண்ணீர் எடுத்து செல்கின்றனர். இரவு நேரங்களில் சாலையை கடந்து செல்லும் போது அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. இந்நிலையில், சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். ஆழ்துளை கிணற்றை சுத்தம் செய்து, மீண்டும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும் இளம்புவனம் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் வந்து முற்றுகையிட்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.கிரியிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு வழங்கினர். அவர், இளம்புவனம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு உடனடியாக லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 100 வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்கவும், முழுமையான சம்பளம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamBlack Forest Cakes


Anbu Communications

CSC Computer Education
Thoothukudi Business Directory