» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை: ஸ்டாலின் உறுதி

செவ்வாய் 21, மே 2019 3:24:04 PM (IST)

திமுக அரசு அமைந்ததும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு வன்மத்தோடு ஆணையிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "சுற்றுப்புறச் சூழலுக்கும் மக்களின் உயிர் வாழ்வுக்கும் பெருந்தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின்  ஜனநாயக ரீதியிலான போராட்டத்தைச் சகியாமல், போராடியவர்கள் மீது அதிமுக அரசு ஈவு இரக்கமின்றி கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டை மறக்கவே முடியாத மே 22 ஆம் தேதி தமிழக வரலாற்றில்  ஒருகருப்பு அத்தியாயம்.  

மாணவி உள்ளிட்ட 13 அப்பாவிகளின் உயிரைப் பறித்த அந்தக் கொடூர துப்பாக்கிச் சூட்டினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு உள்ளும் வெளியிலும் ஆதரித்துப் பேசிய மனிதாபிமானமற்ற செயலையும் மறக்க முடியாத நாள். இந்தத் துப்பாக்கிச் சூடு - தூத்துக்குடி மக்களை மட்டுமல்ல - தமிழக மக்களை - ஏன் உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களை மிகுந்த அதிர்ச்சியில் உறைய வைத்த நாள் என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன். 

100 நாட்களுக்கு மேல் அமைதியாகப் போராடிய மக்கள் மீது அராஜகத்தை ஏவிவிட்டு அந்தப் பகுதியையே ரணகளமாக்கியது அதிமுக அரசு. ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள போராட்டங்களையும் அமைதியான பேரணிகளையும் அடக்கி ஒடுக்கிவிடலாம் என்று நினைத்த அதிமுக அரசை எதிர்த்து எரிமலை போல் எழுந்த கொந்தளிப்பைத் தமிழகம் கண்டது.

ஸ்டெர்லைட் ஆலையை கொள்கை முடிவு எடுத்து நிரந்தரமாக மூட வேண்டும் என்று திமுகவும் எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தினாலும், வஞ்சக எண்ணத்துடன் அதிமுக அரசு அதை ஏற்கவில்லை. துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணைக்கு விடுத்த கோரிக்கையையும் ஒப்புக்கொள்ளவில்லை.

மக்களின் கடுமையான போராட்டத்தைக் கண்டு - எங்கும் இயல்பாகக் கிளம்பிய ஆவேசமான எதிர்ப்பினைச் சமாளிக்க முடியாமல் இறுதியில், ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்து, இன்று வரை ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கையும் பெறப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு ஓர் ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இன்னும் அவர்களுக்கு உரிய நீதியும் கிடைக்கவில்லை. தற்போது இந்தத் துப்பாக்கிச் சூட்டையும், நடைபெற்ற அராஜகத்தையும் கண்டித்து கூட்டம் போடவும், உயிரிழந்த 13 பேருக்கு ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சி கூட  நடத்தவும் விடாமல் அதிமுக அரசு இரக்கம் இல்லாமல் ஆணவ எண்ணத்துடன் தடை போட்டு இருக்கிறது. 

ஒருபக்கம் "நினைவேந்தல் நிகழ்ச்சிக்குத் தடை" இன்னொரு பக்கம் "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவு எடுக்க மறுப்பு" என்று எப்போதும் போல இரட்டை வேடத்தைப் போட்டு கபட நாடகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த ஏமாற்று நாடகத்தை தூத்துக்குடி மக்களும் தமிழக மக்களும் நீண்ட நாள் நிச்சயம் ஏற்றுக்கொள்ளவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள். ஆகவே, மனிதநேயமற்ற முறையில் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நசுக்கும் வகையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் அதிமுக அரசு பிற்போக்குத்தனமாக நடந்துகொள்வது கடுமையான கண்டனத்திற்கு உரியதாகும். 

அப்பாவிகளின் 13 உயிர்கள் அதிமுக ஆட்சியில் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டு ஒரு வருடம் நிறைவடைவதையொட்டி துயரம் நிறைந்த அந்த குடும்பங்களுக்கும், போலீஸ் தடியடிக்கும் அதிமுக அரசின் அடாவடி அராஜகத்திற்கும் ஆளான தூத்துக்குடி மக்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் திமுக அரசு அமைந்ததும் காட்டுமிராண்டித் தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீதும், அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு வன்மத்தோடு ஆணையிட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதே நேரத்தில், மனித உரிமைகளைக்  காலில் போட்டு மிதித்துக் கசக்கிய அதிமுக ஆட்சியின் கொடூரமான  துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி விரைந்து கிடைக்கவும், அமைச்சரவையைக் கூட்டி ஒரு கொள்கை முடிவினை எடுத்து நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் திமுக ஆட்சி அமைந்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் எடுக்கப்படும் என்று இந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் உறுதி அளிக்கிறேன்", என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

செல்வகணபதிமே 21, 2019 - 05:24:26 PM | Posted IP 172.6*****

தளபதியார் அவர்கள் துணை பிரதமர் ஆனவுடன் விசாரணை குழு அமைத்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் .

இவன்மே 21, 2019 - 05:10:01 PM | Posted IP 172.6*****

அதுமட்டுமல்ல... சுட்டவரையும் கூட பிடிக்க துப்பில்லாத அரசு... விளங்கபோவதில்லை...

பிம்பிலிகா பிளாப்பிமே 21, 2019 - 05:09:01 PM | Posted IP 172.6*****

அப்படியே தாமிரபரணியில் -----

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamCSC Computer Education

Anbu Communications


Black Forest Cakes
Thoothukudi Business Directory