» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பாஜக பற்றி அ.தி.மு.க.வினர் விமர்சிக்க கூடாது: எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

புதன் 20, செப்டம்பர் 2023 5:29:51 PM (IST)

பாரதிய ஜனதா பற்றியோ, கூட்டணி பற்றியோ அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் விமர்சனம் செய்து பேசக்கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பற்றி கடந்த 11-ந்தேதி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. தரப்பில் அண்ணாமலை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தி.மு.க. தரப்பிலும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோவையில் கடந்த 17-ந்தேதி அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். இது அ.தி.மு.க.வினருக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அண்ணாமலை பேசிய வீடியோ பதிவை முழுமையாக பார்த்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கடும் கோபம் அடைந்தார். இதையடுத்து அ.தி.மு.க. தரப்பில் இருந்து அண்ணாமலைக்கு அதிரடியாக பதில் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 18-ந்தேதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் "பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எல்லை மீறி செல்கிறார். அவரிடம் அரசியல் தலைவருக்கான பக்குவம் இல்லை. அவர் தலைவ ராக இருக்கும்வரை பா.ஜ.க. வுடன் கூட்டணி கிடையாது. இப்போது எங்கள் கூட்டணியில் பாரதிய ஜனதா இல்லை" என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

இதற்கு பாரதிய ஜனதா துணைத் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். அ.தி.மு.க. தலைமையை விமர்சித்தும், தங்களால் தனியாக நிற்கவும் முடியும் என்றும் ஆவேசமாக பதிவிட்டனர். இது அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை மேலும் பிளவுப்படுத்தும் வகையில் இருந்தது.

அண்ணாமலை தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காததால் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பா.ஜ.க. மீது தொடர் தாக்குதலை நடத்தினார்கள். இதை அறிந்த பாரதிய ஜனதா மேலிட தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே அ.தி.மு.க.-பா.ஜ.க. மோதலுக்கு சில புதிய காரணங்கள் கூறப்பட்டன. டெல்லியில் கடந்த 14-ந்தேதி மத்திய மந்திரி அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியபோது தொகுதி பங்கீடு பற்றி பேசப்பட்டதாகவும், அப்போது அ.தி.மு.க. 27 இடங்களிலும், பாரதிய ஜனதா 13 இடங்களிலும் போட்டியிடலாம் என்று அமித்ஷா கூறியதாகவும் தகவல்கள் வெளியானது.

அமித்ஷாவின் இந்த தொகுதி பங்கீடு கணக்கை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்றும் அதனால்தான் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்க வைத்தார் என்றும் தகவல்கள் வெளியானது.

இதை அறிந்த பா.ஜ.க. மேலிட தலைவர்கள் உடனடியாக இந்த சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்தனர். எடப்பாடி பழனிசாமியுடனும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடனும் சமரச பேச்சு நடத்தினார்கள்.

அப்போது அ.தி.மு.க. தரப்பில் நிபந்தனை ஒன்று வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அண்ணாமலையை பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அ.தி.மு.க. நிபந்தனையை பா.ஜ.க. மேலிட தலைவர்கள் ஏற்கவில்லை.

இது தொடர்பாக பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அண்ணாமலையிடம் விளக்கம் கேட்டனர். அப்போது தனது பேச்சில் எந்த தவறும் இல்லை. தனது பேச்சை தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்று அண்ணாமலை விளக்கம் அளித்தார்.

இதையடுத்து அ.தி.மு.க.வுடன் ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வர பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி சமூக வலைதளங்களில் அ.தி.மு.க.வை விமர்சிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டது. மேலும் கூட்டணி தொடர்பாக இனி தமிழக பா.ஜ.க. தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அமைதியாகி விட்டனர். இதனால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சற்று இறங்கி வந்துள்ளனர். பாரதிய ஜனதாவுடன் இப்போதைக்கு மோதல் போக்கை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஒருமித்த முடிவை மேற்கொண்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவு ஒன்றை அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பிறப்பித்துள்ளார். பாரதிய ஜனதா பற்றி சமூக வலைதளங்களில் கேலி கிண்டல் செய்ய வேண்டாம். அண்ணாமலையை கண்டித்து போஸ்டர் ஒட்ட வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி தனது வாய்மொழி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாரதிய ஜனதா பற்றியோ, கூட்டணி பற்றியோ அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் விமர்சனம் செய்து பேசக்கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். வாய்மொழியாக அவர் பிறப்பித்த இந்த உத்தரவின் அடிப்படையில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் யாரும் இன்று கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். இதனால் அ.தி.மு.க.-பாரதிய ஜனதா இடையே ஏற்பட்ட மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்து இருப்பதாக தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory