» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தெருக்களில் திரியும் கால்நடைகளால் மனித இனத்திற்கு ஆபத்து: ஓ.பி.எஸ்., அறிக்கை!
வெள்ளி 11, ஆகஸ்ட் 2023 10:43:43 AM (IST)
தெருக்களில் கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் "சென்னை அரும்பாக்கம் பகுதியில் பள்ளி முடித்துவிட்டு தாயுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமி மாடு முட்டி கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்தார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளை இணையதளத்தில் பார்க்கின்றபோது நெஞ்சம் பதைபதைக்கிறது.
இந்தச் சம்பவத்தைக் கண்டு அருகில் உள்ளவர்கள் கற்களால் மாடுகளை விரட்ட முயற்சித்தும், சிறிது நேரத்திற்கு மாடு அந்தச் சிறுமியை தொடர்ந்து தாக்கியது பேரதிர்ச்சியை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமி பூரண குணமடைந்து விரைந்து இல்லம் திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னை மாநகரத்தில் அனைத்து தெருக்களிலும், மாடுகள் மற்றும் நாய்களின் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை, அனகாபத்தூர், பம்மல், புரசைவாக்கம், பெரம்பூர் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நாய்கள் மற்றும் மாடுகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது.
நாய்களின் தொல்லை காரணமாக மக்கள் தெருக்களில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நாய்கள் அங்குமிங்கும் குறுக்கே செல்வதன் காரணமாக பல விபத்துகள் ஏற்பட்டு மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சிலர் நாய்க் கடிக்கு ஆளாகி சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். வாகனமில்லாமல் இரவு நேரங்களில் நடந்து செல்வது என்பது அபாயகரமானதாக உள்ளது.
இதேபோன்று, பெரும்பாலான தெருக்களில் மாடுகள் கும்பல் கும்பலாக சென்று, மாநகராட்சியால் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளை கவிழ்த்து அதில் உள்ள உணவுப் பொருட்களை தின்பதன் காரணமாக வாகன நெரிசல் ஏற்படுவதோடு, அந்த இடமே சுகாதாரமற்ற சூழ்நிலையாக மாறிவிடுகிறது.
சில இடங்களில் மாடுகள் மிரண்டு ஓடுவதன் காரணமாக மக்கள் பதற்றமடைந்து அதனால் கீழே விழக்கூடிய சம்பவங்கள் நடைபெற்று, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. மாடுகள் மக்களை முட்டும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றன. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயமாகும்.
வேளாண் துறையில் முக்கியப் பங்கு வகிப்பவை கால்நடைகள் என்றாலும், அந்தக் கால்நடைகளால் மனித இனத்திற்கு ஆபத்து ஏற்படுமேயானால், கால்நடைகளை முறைப்படுத்தவும், தெருக்களில் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது அரசின் தலையாய கடமையாகும்.
கிராமப் புறங்களில் மாடுகள் மேய்வதற்கு இட வசதிகள் உள்ளன. இப்படிப்பட்ட இட வசதி நகர்ப்புறங்களில், குறிப்பாக சென்னை மாநகரத்தில் இல்லை என்ற நிலையில் நாய்கள் மற்றும் மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இடவசதி இல்லாமல், தெருக்களை மட்டுமே நம்பி மாடுகளை வளர்ப்போரை கண்டறிந்து, அவர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்கி, மாடுகள் தெருக்களில் சுற்றித் திரிவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகள் மற்றும் நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவில்லையெனில், மனிதர்கள் படுகாயமடைவதும், உயிரிழப்பதும் தொடர் கதையாகிவிடும்.
எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தெருக்களில் மாடுகள் மற்றும் நாய்கள் நடமாட்டத்தை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
ஜெ . தொண்டர்கள்Aug 13, 2023 - 04:02:51 PM | Posted IP 172.7*****
கால்நடைகளை பற்றி பேசுகிறீர்களே.... நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை இதயதெய்வம், புரட்சி தலைவி அம்மா என்று (நடித்த)சொன்ன ஜெயலலிதா பற்றி சட்டமன்றத்தில் எதுவும் நடக்கவில்லை ஜெயலலிதா நடத்திய நாடகம் என்று விடியல் ஆட்சி கட்டுக்கதை சொல்கிறார்கள்... நீங்கள் ஒரு அறிக்கை கூட விடவில்லை....இப்போது தெரிகிறது... நீங்கள் விடியல் பி டீம் என்று.....
பிராடுAug 14, 2023 - 09:05:24 PM | Posted IP 172.7*****