» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

வியாழன் 27, ஜூலை 2023 11:07:40 AM (IST)

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் என்பதே இருக்காது. இந்த நிலைதான் பிற மாநிலங்களுக்கும் ஏற்படும் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருச்சியில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: தமிழகத்தில் எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவிற்கு அனைவருக்கும் பொதுவான ஆட்சியை திமுக நடத்திக் கொண்டிருக்கிறது. மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டம், பள்ளியில் காலை சிற்றுண்டித் திட்டம், விவசாய நலன் சார்ந்த திட்டம் என மக்கள் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் பயன்பெறும் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், சிலர் நம் மீது காழ்ப்புணர்வு கொண்டு பொய்ச் செய்திகளை பரப்பிக் கொண்டுள்ளனர். பொய்க்கு ஆயுசு குறைவு. தேவையில்லாத பலவற்றை பேசி நம்மை திசை திருப்பும் முயற்சியில் ஆளுநர் செயல்படுகிறார். தேர்தல்வரை அவர் அப்படி பேசுவதே நமக்கு நல்லது. பாஜக ஆட்சி தொடர்ந்தால், இந்திய அரசமைப்பு சட்டமே இனி இருக்காது. வரும் தேர்தலில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதே முக்கியம். முன்பு குஜராத்தில் நடந்தது. 

இப்போது, மணிப்பூரில் நடைபெறுகிறது. மணிப்பூரைப் போன்று வேறு மாநிலங்கள் உருவாகக் கூடாது. அதற்கு பாஜக வீழ்த்தப்பட வேண்டும். இந்தியாவின் கட்டமைப்பையே பாஜக சிதைத்துவிட்டது. இந்த நிலை இனியும் தொடரக் கூடாது. அதற்கு வரும் தேர்தலில் பாஜக-வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

திமுகவை வாரிசு கட்சி என தொடர்ந்து பிரதமர் மோடியும், பாஜக-வினரும் பிரசாரம் செய்கின்றனர். ஆமாம், நாங்கள் ஆரியத்தை வீழ்த்தும் திராவிடத்தின் வாரிசுகள். பெரியார், அண்ணா, கருணாநிதியின் வாரிசுகள். எனவே, நாங்கள் வாரிசுகள் என தைரியமாக கூறுகிறோம். பாஜக யாருடைய வாரிசு? பாஜக கோட்சேவின் வாரிசு என்பதை தைரியமாக சொல்ல இயலுமா?.

எடப்பாடி பழனிசாமியை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழல் குறித்து பிரதமர் மோடி பேசுகிறார். சிபிஐ விசாரணைக்கு தடைக் கோரி நீதிமன்றம் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஊழல் குறித்து பிரதமர் பேசக் கூடாது. ஊழல், முறைகேடுகளை காட்டி ஆட்சியை கலைத்துவிடுவோம் என மிரட்டியே அதிமுக-வை பாஜக அடிமையாக வைத்திருந்தது.

இதனால், தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கும் நிலை உருவானது. தமிழகத்தின் உரிமைகளை கைவிட்ட அதிமுகவும், அதை காவு வாங்கிய பாஜகவும் கரம் கோர்த்து இன்று தேர்தல் களத்திற்கு வருகிறார்கள். தமிழகத்தில் அவர்களை வீழ்த்தியே ஆக வேண்டும். இந்தியாவைக் காப்பற்றப்போவது இந்தியா கூட்டணிதான். நாடும் நமதே. நாற்பதும் நமதே. இந்தியா வெல்லும். அதனை 2024 தேர்தல் சொல்லும் என்றார்.


மக்கள் கருத்து

நல்லவர்களேJul 29, 2023 - 04:11:58 PM | Posted IP 172.7*****

பிஜேபி தமிழ்நாட்டில் வந்து ரொம்ப காலம் ஆகிறது....அண்ணாமலை தலைமையில் மிக பெரிய வளர்ச்சி கொண்டுள்ளது.....பிஜேபியில் காமெடி நடிகர் சேகர் போல சிலர் திராவிட கட்சிகளுக்கு சப்போர்ட் பண்ணிக்கொண்டு பிஜேபி வளர்ச்சியை கெடுத்தவர்களெல்லாம் அண்ணாமலையால் தூக்கி எறியப்பட்டனர் ....பிஜேபி + அதிமுக அடுத்த ஆட்சியை பிடிக்கும்.....

ஓட்டு போட்ட முட்டாள்Jul 29, 2023 - 12:47:03 PM | Posted IP 162.1*****

பிஜேபி உள்ளே வந்துடும் சொல்லி ஓட்டு பிச்சை கேக்குது

tamilarkalJul 27, 2023 - 04:44:59 PM | Posted IP 172.7*****

தமிழ்நாடு காமராஜர் ஆட்சி போல பொற்கால தமிழகமாக மாறிவிடும்.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory