» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
தாய்மொழி உணர்வோடு விளையாடி வீண் வம்பை தேடிக்கொள்ளாதீர்கள் : அமித்ஷாவுக்கு திமுக பதிலடி!!
திங்கள் 11, ஏப்ரல் 2022 11:38:28 AM (IST)
"மக்களின் தாய்மொழி உணர்வோடு விளையாடி வீண் வம்பை தேடிக்கொள்ளாதீர்கள்" என திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியாகி உள்ளது.
முரசொலி நாளிதழில் வெளியான தலையங்கத்தில் "1965-ல் தமிழகத்தில் நடந்த இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் பற்றி இன்றைய, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்க நியாயமில்லை! அந்த காலக் கட்டத்தில் அவர் முதல் பிறந்த நாளைக் கொண்டாடாத குழந்தை. ஆம்; 1964 அக்டோபர் 22-ந் தேதிபிறந்த அவர், அப்போது மூன்று மாதக்குழந்தை! குறைந்தபட்சம் அந்த பழையவரலாறுகளைப் படித்தறிந் திருக்கவாவது முயற்சி செய்திருக்க வேண்டும்!
அந்த மொழிப்போர் தமிழ்நாட்டை உலுக்கிப் போட்டது; நாட்டையே மிரள வைத்தது!
எழுந்தது சேனை; யெழலுமிரிந்தது பாரின் முதுகு
விழுந்தன கானு மலையும்,
அதிர்ந்தன நாலு திசைகள்
அடங்கின ஏழுகடல்கள்
- கலிங்கத்துப் பரணியின் வீர வரிகளுக்கு
மீண்டும் உயிரூட்டிய போராட்டமாக நடந்து -தமிழக அரசியல் வரலாற்றையே திருப்பிப்போட்ட போராட்டம் அது!ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாகதமிழறிஞர்கள் - தமிழக அரசியல் தலைவர்கள் ஒன்றுகூடி - தாய்மொழித் தமிழுக்குவரும் ஆபத்தைத் தடுத்து நிறுத்திடநடத்திய தொடர் போராட்டங்களின் உச்சகட்டம் அது! அமித்ஷா - மோடி போன்றவர்கள் கண்ட குஜராத் கலவரத்தைப்போன்று தூண்டிவிடப்பட்ட கலவரமல்ல
அது; தாய் மொழியுணர்வால் உந்தப்பட்டு உருவான உணர்ச்சிப் போராட்டம்! இந்தித் திணிப்பை எதிர்த்து இந்தியாவின்பல இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பு நிலைபுகைந்த நிலையில் தமிழகத்திலே அது வெடித்துஒரு பெரும் பிரளயத்தையே உருவாக்கியது! 1965-ல் தமிழகத்தினை குலுக்கிய இந்தப் போராட்டத்தினையும் - அதன் விளைவுகளையும், தமிழகத்தில் உருவான இந்த உணர்வுஇந்திப் பேசாத மாநிலங்களிலும், பின்னர் பரவிஅதனால் நாட்டின் பல பகுதிகள் கொதிநிலைக்கு ஆளாகின!
இந்திப் பேசாத பகுதி மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்கும் - என்ற நேருவின் உறுதிமொழியை அரசுஉறுதியாக கடைப்பிடிக்கும் என்று வானொலியில் திரும்பத் திரும்ப அறிவிக்கப்பட்டது!இவை 1965ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரின் சிலதுளிகள்! மோடி அவர்கள் உபயோகித்த சொல்லில் கூற வேண்டுமானால் இதெல்லாம் நடந்த போது அமித்ஷா பப்பு கூட அல்ல; பேபி !
அமித்ஷாவின் இன்றைய இந்தித் திணிப்பு பேச்சுக்கு தமிழகம் மட்டுமல்ல; கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்கள் உடனடி எதிர்ப்பைக் காட்டியுள்ளன. இந்தி மாநிலம் போதும்! இந்திய மாநிலங்கள் தேவையில்லை என உள்துறைஅமைச்சர் அமித்ஷா கருதுகிறாரா? - எனத் தமிழக முதல்வர் தளபதி காட்டமாகக் கேட்டு, ஒற்றை மொழி ஒற்றுமைக்கு உதவாது -என எச்சரித்துள்ளார்.
கருநாடக மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமைய்யா, மாநிலங்களின் பரஸ்பர தொடர்பு மொழியாக இந்தியைப் பயன்படுத்தவேண்டும் என்று கூறுவது கலாச்சார பயங்கர வாதமாகும் என்றும் இந்தி அல்லாதபிறமொழிகள் மீது பாரதிய ஜனதா கலாச்சாரபயங்கரத்தை கட்டவிழ்த்து விடுகிறது என்று வெகுண்டெழுந்து, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமைத் தன்மையை பாரதிய ஜனதா சிதைக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார். கேரளாவும் அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது!
அந்த காலகட்டங்களில் இந்தி மொழி திணிக்கப்படும் போது, அன்றே அறிஞர் அண்ணா ஆணித்தரமாக எடுத்துரைத்தார். இது மொழிப் பிரச்சினை அல்ல; இது ஆதிக்கப் பிரச்சினையே தவிர மொழிப்பிரச்சினை அல்ல. நாம் எந்த அளவிற்கு பணியத் தயாராக இருக்கிறோம் என்பதைக் கண்காணிப்பதற்காக - அளவிடுவதற்காக,அரசியல் ஆதிக்கக்காரர்கள், அரசியல் சூழ்ச்சிக்காரர்கள், ஏகாதிபத்திய வெறி கொண்டவர்கள், தங்களுடைய மொழியைத் திணித்து, இதைத்தான் நீ ஆட்சி மொழியாகக்கொள்ள வேண்டும். இதிலேதான் பாடங்கள் நடக்கும். இதிலே தான் தேர்வுகள்நடக்கும்.
இதிலே தான் சட்டங்கள் இயற்றப் படும். இந்த மொழியில் தான் பாராளுமன்றத்தில் பேசுவார்கள். இது தெரிந்தால்இங்கெல்லாம் வா; இது தெரியாவிட்டால் இரண்டாந்தரக் குடிமகனாய், மட்டரகமனிதனாய், ஏனோதானோவாய் எடுப்பார்கைப் பிள்ளையாய் அடங்கிக் கிட - என்பதுதான் இதன் உட்பொருளாகும்! அண்ணா அன்று இப்படி எச்சரித்தார்.
அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்க மற்ற சமுதாயம் அமைத்தேதீருவோம். இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்பது கலைஞர் தந்த ஐம்பெரும் முழக்கங்களின் முதல் மூன்றுமுழக்கங்கள்!இதோ அந்த முழக்கங்களை தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் தி.மு.கழகம் உள்ளவரை தமிழகம் அமித்ஷாவின் இந்தி வெறிக் கூத்துகளுக்கு இடம் தராது என்பதை எச்சரிக்கையாக கூறுகிறோம்!
தமிழகம் மட்டுமல்ல; இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டிராத மாநிலங்களும் ஒன்று கூடி அணிவகுக்கத் தொடங்கியுள்ளது - மக்களின் தாய்மொழி உணர்வோடு விளையாடி வீண் வம்பை தேடிக்கொள்ளாதீர்கள் என அமித்ஷாவுக்கும், அவருக்கு ஆதரவாக குரல் எழுப்புவோருக்கும் அறிவுறுத்த விரும்புகிறோம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய பணத்தின் நேர்மையில் சந்தேகம் : ப.சிதம்பரம் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
செவ்வாய் 30, மே 2023 5:15:03 PM (IST)

திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் : பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
ஞாயிறு 28, மே 2023 9:15:02 AM (IST)

ஜல்லிக்கட்டு வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!!
செவ்வாய் 23, மே 2023 12:30:22 PM (IST)

கர்நாடக மக்களுக்கு நாடே நன்றி சொல்கிறது: ப.சிதம்பரம் கருத்து
சனி 13, மே 2023 4:48:52 PM (IST)

புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
வெள்ளி 5, மே 2023 12:14:37 PM (IST)

மதுவுக்கு அனுமதி அளிக்கும் அரசாணைகளை திரும்பப்பெற வேண்டும்: அன்புமணி
செவ்வாய் 25, ஏப்ரல் 2023 11:12:03 AM (IST)

nallavanApr 13, 2022 - 03:57:26 PM | Posted IP 108.1*****