» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மீனவர்கள் கைது விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

திங்கள் 28, பிப்ரவரி 2022 5:06:35 PM (IST)

தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட ஏதுவாக, இலங்கை அதிகாரிகளிடம் இதுகுறித்து விவாதித்திட வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (28-2-2022) கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீண்டும் மீண்டும் துன்புறுத்தப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் இந்தியப் பிரதமரின் உடனடி கவனத்திற்கு கொண்டுவர விழைவதாகத் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் தங்களது இயந்திர மீன்பிடிக் கப்பலில் (பதிவு எண் IND-TN-06-MM-6824) 24-2-2022 அதிகாலையில் பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள மயிலாட்டி தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 13 மீனவர்கள் மற்றொரு மீன்பிடிப் படகில் (பதிவு எண் IND-PY-PK-MM-1370) மீன்பிடிக்கச் சென்றபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அதேபோன்று, 26-2-2022 அன்று இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் 27-2-2022 அதிகாலையில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கையிலுள்ள கிராஞ்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் குறுகிய கால கட்டங்களில் தொடர்ந்து இதுபோன்று எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், மீனவர்கள் துன்புறுத்தப்படும் நிகழ்வுகளும், கைது செய்யப்படும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன என்பதைக் குறிப்பிட்டு தமிழக அரசின் சார்பில் பலமுறை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளபோதிலும் இந்த நிலை தொடர்வதாகத் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

பாக் வளைகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிக்கும் வகையிலான இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள், மத்திய அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்று முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள் சிறைபிடிக்கப்படுவதும், மீனவ சமூகத்தினரிடையே மிகுந்த விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், இந்த விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நேரடியாகத் தலையிட்டு, மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்கும் வகையில், இப்பிரச்சினையை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டுமென்று தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து

sankarMar 5, 2022 - 05:04:22 PM | Posted IP 108.1*****

in congress regime 10 years there was no sound

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory