» சினிமா » செய்திகள்
ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு இளையராஜா நோட்டீஸ்!
புதன் 1, மே 2024 10:17:07 AM (IST)
ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தில் அனுமதி இல்லாமல் தனது பாடலை பயன்படுத்தியுள்ளதாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
காப்புரிமை விவகாரத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்து கறாராக செயல்பட்டு வருவதாக சினிமாத் துறையில் உள்ள பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். நீதிமன்றத்திலும் அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
ஒரு படத்துக்கு சம்பளம் வாங்கிவிட்டு இசையமைக்கும் இசையமைப்பாளருக்கு அந்த பாடல் எப்படி சொந்தமாகும் என்கிற கேள்வியை பலரும் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். பாடல் வரிகள், இசை மற்றும் பாடியவரின் குரல் என மூன்றும் சேர்ந்துதான் ஒரு நல்ல பாடல் உருவாகிறது என்றும் வைரமுத்து தொடர்ந்து தனது கருத்தையும் முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தில் அறிமுக டீசரில் இசையமைப்பாளர் அனிருத் பயன்படுத்திய 'டிஸ்கோ' பாடலுக்கு எதிராக இளையராஜா தரப்பிலிருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தற்போது நோட்டீஸ் பறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள கூலி படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் அந்த படத்தின் அறிமுக வீடியோ ஒன்று வெளியானது. அதில், இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்ற பாடலை அனிருத் பயன்படுத்தியிருப்பார்.
இசையமைத்த தனக்குத்தான் தன்னுடைய பாடல்கள் முழுவதும் சொந்தம் என்றும் தனது பாடல்களை அந்தப் பாடல்களை பாடியவர்கள் கூட அனுமதி இல்லாமல் மேடைகளில் பாடக்கூடாது என்றும் மற்ற படங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் அதற்கு உரிய காப்புரிமையை செலுத்திவிட்டு பயன்படுத்தலாம் என தொடர்ந்து கூறி வரும் இளையராஜா தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்து வெளியான தங்கமகன் படத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளியான "வா வா பக்கம் வா" பாடலை எந்த ஒரு முறையான அனுமதியும் பெறாமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தின் அறிமுக வீடியோவுக்கு பயன்படுத்தி இருப்பதாகவும் உரிய அனுமதியை பெற வேண்டும் அல்லது அந்த டீசரில் இருந்து அந்த பாடலை நீக்க வேண்டும் என அதிரடியாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸை இளையராஜா தரப்பு அனுப்பி இருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.