» சினிமா » செய்திகள்

ஓட்டுப் போடாமல் இருப்பது பச்சை துரோகம் : விஜய் சேதுபதி கருத்து!

புதன் 3, ஏப்ரல் 2024 5:19:18 PM (IST)

"காசு வாங்கிட்டு ஓட்டுப் போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்வளவு பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டுப் போடாமல் இருப்பது" என்று நடிகர் விஜய் சேதுபதி வீடியோ வெளியிட்டுள்ளார். 

தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், "நாம எல்லாரும் ஆசையா எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தல் வந்துவிட்டது. வழக்கமாக தேர்தல் வரும்போது எல்லாருக்கும் ஒரு மனப்பான்மை இருக்கும். யார் வந்தால் நமக்கென்ன, இல்லை யார் காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுவோம். ஒட்டு போட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. இது போன்ற மனநிலையை தூக்கி ஓரமா வைச்சிடுங்க. நாம, நமக்காக இல்லையென்றாலும் நமது குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நமது அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும்.

காசு வாங்கிட்டு ஓட்டுப் போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்வளவு பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டுப் போடாமல் இருப்பது. உங்களுக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என யாராக இருந்தாலும் சரி, அவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவர்களால் நமக்கு என்ன பயன் என்பதை விட இந்த நாட்டிற்கு என்ன பயன் என்பதை யோசித்து பாருங்கள். 

அதில் நம்முடைய சுயநலமும் இருக்கிறது. நாம் எல்லாரும் சேர்ந்தது தானே நாடு. நாம் என்பது இன்றைக்கும் மட்டும் பார்ப்பதா, அல்லது நாளைக்கு நம்முடைய குழந்தைகள் வாழப்போகிற எதிர்காலத்தை பற்றியும் சிந்திக்கிறதா. நம்முடைய குழந்தைகளுடைய எதிர்காலம் ரொம்ப முக்கியம். நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போகிறோம். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. 

இதற்கு முன்னாடி அவர்கள் என்ன செய்தார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதை அலசி ஆராய்ந்து ஓட்டு போடுங்கள். இதுவரை அரசியல் செய்திகளை கேட்கவில்லை என்றாலும் பேசவில்லை என்றாலும் பார்க்கவில்லை என்றாலும் சரி, இன்றையிலிருந்து ஓட்டுப் போடுகிற நாள் வரை அரசியல் பற்றி பேசுங்கள். தெளிவா, சிந்தித்து செயல்பட்டு வாக்களியுங்கள்" என்று பேசியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory