» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தீப்தி சர்மா 5 விக்கெட் சாதனை: மகளிர் உலகக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!
திங்கள் 15, ஜூன் 2026 3:43:32 PM (IST)

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில், இந்திய மகளிர் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளாகக் களம் இறங்கிய ஷஃபாலி வர்மா 6 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவுடன், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக விளையாடி 3ஆவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பார்தி புல்மாலி 1 ரன்னிலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 4 பவுண்டரிகளுடன் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 17 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. தீப்தி சர்மா 12 ரன்களுடனும், ஸ்ரேயங்கா பாட்டீல் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் சாதியா இக்பால், ஃபாத்திமா சனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி, இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை முனீபா அலி அதிகபட்சமாக 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீராங்கனைகளான குல் ஃபெரோஸா 12, ஆயிஷா ஜாஃபர் 12, ஆலியா ரியாஸ் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இதர வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். இறுதியில், 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 106 ரன்களுக்குச் சுருண்டது.
இந்திய அணி தரப்பில் அபாரமாகப் பந்துவீசிய தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மற்றொரு வீராங்கனை ஸ்ரீசரணி 3 விக்கெட்டுகளையும், ஷஃபாலி வர்மா 1 விக்கெட்டையும் கைப்பற்றி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். 64 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற இந்த அபார வெற்றியின் மூலம் உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி தனது பலத்தை நிரூபித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் அதிரடி வெற்றி; ரொனால்டோ புதிய சாதனை!
புதன் 24, ஜூன் 2026 10:51:17 AM (IST)

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : கோலி உள்ளே... ஜெய்ஸ்வால் வெளியே!!
திங்கள் 22, ஜூன் 2026 11:10:22 AM (IST)

போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கோ: நடுகளத்தில் மிரட்டிய சாமுவேல் முத்துசாமி!
வெள்ளி 19, ஜூன் 2026 12:00:29 PM (IST)

உலகக் கோப்பையில் தமிழ் வம்சாவளி வீரர்: காங்கோ அணிக்காகக் களம் கண்ட சாமுவேல் முத்துசாமி!
வியாழன் 18, ஜூன் 2026 12:04:10 PM (IST)

மகளிர் டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
வியாழன் 18, ஜூன் 2026 11:31:58 AM (IST)

கில், இஷான் கிஷன் சதம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
வியாழன் 18, ஜூன் 2026 8:32:03 AM (IST)








