» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆட்சிக்கு வந்த 40 நாட்களில் செய்த சாதனைகள் : பட்டியலை வெளியிட்டார் முதலமைச்சர் விஜய்!

புதன் 24, ஜூன் 2026 11:01:14 AM (IST)

தான் ஆட்சிக்கு வந்த 40 நாட்களுக்குள் அரசு செய்துள்ள மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்துத் சட்டசபையில் முதலமைச்சர் விஜய் விரிவான பட்டியலை வெளியிட்டுப் பேசியுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையின் போது முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது, ஆட்சிக்கு வந்து 40 நாட்கள்தான் ஆகிறது அதற்குள் என்ன செய்தீர்கள் எனக் கேட்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அரசு செயல்படுத்திய முக்கியத் திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.

முதலமைச்சர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் :

சமூக நலம் மற்றும் கடன்கள் தள்ளுபடி: ஏழை எளிய மக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்களில் முதற்கட்டமாக ரூ.2,045 கோடி தள்ளுபடி செய்து ஆணையிடப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்காக 'சிங்கப்பெண்' சிறப்புப் படையும், வீடுகளுக்கு 200 யூனிட் வரை கட்டணமில்லா இலவச மின்சாரமும் வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்புக்காகத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மதுக்கடைகள் மூடல் மற்றும் அம்மா உணவகங்கள்: வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் அதற்கு அருகில் இருந்த 717 மதுக்கடைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளன. அங்குப் பணியாற்றிய ஊழியர்களுக்கு வேறு கடைகளில் வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும், கவனிக்கப்படாமல் விடப்பட்டிருந்த அம்மா உணவகங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

நிர்வாகம் மற்றும் கனிமவளக் கண்காணிப்பு: பத்திரப்பதிவுத் துறையில் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, வருகை இல்லா ஆவணப்பதிவு முறை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோத கல்குவாரிகள் சீல் வைக்கப்பட்டு, ஆளில்லா விமானங்கள் (டிரோன்) மூலம் கனிமவளக் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. லஞ்சமற்ற தமிழ்நாட்டை உருவாக்க அனைத்துத் துறைகளிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவம் மற்றும் மத்திய அரசுத் திட்டங்கள்: ஸ்கேன் மையங்களில் கருவுறுவதற்கு முன் மற்றும் பின் ஏற்படும் தவறுகளைக் கண்காணிக்க மருத்துவத் துறைக்கு 40 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜல் ஜீவன் மிஷன் திட்டம் புதுப்பிக்கப்பட்டு 'ஜல் ஜீவன் மிஷன் 2.0' என்ற பெயரில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

தொழில் முதலீடுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மைய விரிவாக்கத் திட்டம், கோவையில் மின்னணு பொருட்கள் உற்பத்தித் திட்டம் மற்றும் திருவள்ளூர் காட்டுப்பள்ளி எல் அன்ட் டி கப்பல் கட்டும் தளம் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் வெறும் 'சாம்பிள்'தான் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், இனிவரும் நாட்களில் படிப்படியாக உழைத்து ஊழலற்ற, பெண்களுக்குப் பாதுகாப்பான, வெளிப்படையான தமிழ்நாட்டை மக்களுக்குத் தருவதே தங்களது ஒரே குறிக்கோள் என்று தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory