» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுகவின் மிரட்டலால் ரஜினி பின்வாங்கினார்; ஆனால் விஜய் அஞ்சமாட்டார்! - ஆதவ் அர்ஜுனா

வியாழன் 12, மார்ச் 2026 5:45:26 PM (IST)

எம்.ஜி.ஆருக்குப் பிறகு மக்கள் செல்வாக்குள்ள நடிகராக அரசியலுக்கு வர முயன்ற ரஜினிகாந்தை, திமுக மிரட்டி முடக்கியது. ஆனால், நடிகர் விஜய் எதற்கும் அஞ்சாமல் மாற்றத்தை நோக்கிப் பயணிக்கிறார்," என்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தத் தவறிய தமிழக அரசு மற்றும் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்குக் முட்டுக்கட்டை போடும் காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டித்து, தவெக சார்பில் இன்று சென்னையில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஆதவ் அர்ஜுனா தெரிவித்ததாவது: "தமிழக அரசியலில் 'சிஸ்டத்தை' மாற்ற வேண்டும் என்று ரஜினிகாந்த் விரும்பினார். ஆனால், திமுக குடும்பம் கொடுத்த அழுத்தங்கள் மற்றும் மிரட்டல்கள் காரணமாக அவர் அரசியலுக்கு வர முடியாமல் போனது. இன்று என்ன நிலை? ரஜினிகாந்த் கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ரஜினிகாந்த் மீது எங்களுக்கு விமர்சனம் இல்லை. ஆனால், அவர் இழந்த அந்தப் போராட்டக் குணமும் மனவலிமையும் விஜய்யிடம் உள்ளது. கரூர் சம்பவத்திற்குப் பிறகும் நாங்கள் அஞ்சாமல் களத்திற்கு வந்துவிட்டோம். விஜய்யைத் திமுகவால் விலைக்கு வாங்கவோ, மிரட்டிப் பணியவைக்கவோ முடியாது," என்று அவர் குறிப்பிட்டார்.

திமுகவை எதிர்த்துப் பிரிந்த வைகோ, இன்று 4 சீட்டுகளுக்காகத் தனது கொள்கையை அடகு வைத்துவிட்டு உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும் நிலைக்கு வந்துள்ளார். திமுகவை எதிர்த்த திருமாவளவனாலும், 'மையம்' கண்ட கமல்ஹாசனாலும் எதையும் மாற்ற முடியவில்லை. கமலும் இப்போது ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடமே தஞ்சம் புகுந்துவிட்டார்.

மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வமே இன்று திமுக ஆதரவு நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டார் என்றால், திமுகவின் பண பலத்தையும் மிரட்டல் அரசியலையும் பார்த்துக் கொள்ளுங்கள். திமுக தனது பண பலத்தால் யாரையும் விலை கொடுத்து வாங்கலாம் என்று நினைக்கிறது. ஆனால், தமிழகத்தில் விலை கொடுத்து வாங்க முடியாத, மிரட்டலுக்குப் பணியாத ஒரே தலைவர் விஜய் மட்டுமே. தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்க அவர் உறுதியாகப் பயணிப்பார் என ஆதவ் அர்ஜுனா தனது உரையில் முழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory