» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீதிமன்றத்தில் அண்ணாமலை குறுக்கு விசாரணை: 2 கப்பல்கள் வாங்கியதை ஒத்துக்கொண்ட டி.ஆர்.பாலு!

புதன் 18, பிப்ரவரி 2026 11:29:00 AM (IST)



திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை நேற்று நேரில் ஆஜராகி குறுக்கு விசாரணை செய்தார். இந்த விசாரணையின் போது பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகின.

தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, 'திமுக ஃபைல்ஸ்' (DMK Files) என்ற பெயரில் திமுக தலைவர்களின் சொத்து விவரங்களை வெளியிட்டார். அதில், முன்னாள் மத்திய அமைச்சரான டி.ஆர்.பாலுவுக்கு 21 நிறுவனங்கள் இருப்பதாகவும், முறைகேடாகச் சொத்து சேர்த்துள்ளதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இதனை மறுத்த டி.ஆர்.பாலு, அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்றுவிசாரணைக்கு வந்தபோது, அண்ணாமலையே நேரடியாக டி.ஆர்.பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது நடந்த விவாதத்தின் முக்கியப் பகுதிகள்:

அண்ணாமலை: "நீங்கள் கப்பல் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது 10 கப்பல்களைச் சொந்தமாக வாங்கினீர்கள் என்று 2014-ல் மு.க.அழகிரி கூறியது உங்களுக்குத் தெரியுமா?"

டி.ஆர்.பாலு: "எனக்குத் தெரியாது."

இதனைத் தொடர்ந்து, மு.க.அழகிரி இது தொடர்பாகப் பேட்டியளித்த பத்திரிகைச் செய்திகளை ஆதாரமாக அண்ணாமலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அண்ணாமலை எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த டி.ஆர்.பாலு, மு.க.அழகிரியின் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

"மு.க.அழகிரி விஷயம் தெரியாமல் அரைவேக்காட்டுத் தனமாகப் பேட்டியளித்துள்ளார். 10 கப்பல்கள் என்பது உண்மையில்லை, 2 கப்பல்கள் மட்டுமே வாங்கப்பட்டன. இதற்காக அழகிரி மீது அவதூறு வழக்கு தொடர வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. அண்ணாமலையும் அதையே ஆதாரமாகக் காட்டுவது சரியல்ல," என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

"மத்திய அமைச்சராக இருந்தபோது 10 கப்பல்கள் வாங்கினீர்களா?" என்ற அண்ணாமலையின் கேள்விக்கு, "இல்லை, 2 கப்பல்கள்தான் வாங்கினேன்" என்று டி.ஆர்.பாலு மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்தக் குறுக்கு விசாரணை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமைச்சராக இருந்தபோது கப்பல்கள் வாங்கியதை டி.ஆர்.பாலு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory