» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிட்வா புயல்: அவசியமின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்; முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

வெள்ளி 28, நவம்பர் 2025 4:40:33 PM (IST)

தமிழ்நாட்டிற்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவசியமின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், டிட்வா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன்.

16 SDRF படைகளும் 12 NDRF படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்துத் துறைகளும் முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்திட வேண்டும்!

பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

திமுக நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க  அறிவுறுத்தல்

"டிட்வா" புயல் காரணமாக கனமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட திமுக நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள கடந்த இரண்டு நாட்களாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளடன் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வந்த நிலையில், "தித்வா புயல்" எதிர்கொள்ள அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டுள்ளதோடு, மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உரிய அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

மழையை எதிர்கொள்ள அரசாங்கம் முழு அளவில் தயாராக உள்ளது என்றாலும், ஒருவேளை இயற்கை வழக்கத்திற்கு மாறாகப் பெருமழைப்பொழிவை ஏற்படுத்தினாலும் சரியான முன்னெச்சரிக்கையுடன் பதற்றமில்லாமல் மழைக் காலத்தை எதிர்கொள்வோம். பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையில் கழகமும் களத்தில் துணையாக நிற்க வேண்டும் என கழக உடன்பிறப்புகள் கேட்டுக் கொள்கிறேன். 

குறிப்பாக - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழகச் செயலாளர்களைத் தயார் நிலையில் இருக்கும்படி காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் அறிவுறுத்த வேண்டும். கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளிலேயே முழுமையாக இருந்து மக்களுக்கு உதவிட வேண்டும்.

மழைக்காலத்தில் கட்சியினர், பொதுமக்கள் - தன்னார்வலர்களுடன் இணைந்து பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கித் தருவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வைத்துக் கொள்வது அவசியம். குடிநீர், பால் ஆகிய இரண்டும் மிக அவசியமான தேவையாக இருக்கும். எனவே தங்கள் பகுதிகளில் அவை தடையின்றிக் கிடைக்கின்றனவா என்பதைக் கண்காணித்து, தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரவும், ஆங்காங்கே நடைபெறும் மீட்புப் பணிகளிலும் உதவிடவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், மழைக்காலத்தை எதிர்கொள்ளவும் - பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிடும் வகையிலும் களத்தில் முழுமூச்சுடன் துணையாக நிற்க வேண்டும் என கட்சி தொண்டர்களையும் - நிர்வாகிகளையும் கேட்டுக் கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory