» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செந்தில் பாலாஜியின் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிய டிஎஸ்பி: திமுக, காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதம்

செவ்வாய் 26, மார்ச் 2019 11:14:07 AM (IST)

கரூர் வேட்பமனுத் தாக்கலுக்குச் சென்ற  காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை காக்க வைத்தது குறித்து கேள்விஎழுப்பியதால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெஞ்சில் கை வைத்துத் தள்ளினார் டிஎஸ்பி. இதனால் கொந்தளித்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி போட்டியிடுகிறார். நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருடன் கூட்டணி கட்சியின் கரூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் என்கிற முறையிலும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பிரமுகர்கள் உடன் சென்றனர். கரூர் மாவட்டக் ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையும் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய பகல் 11 மணி முதல் 12 மணி  வரையிலும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு பகல் 12 மணி முதல் 1 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

வேட்பாளர் ஜோதிமணி, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்ய காத்திருந்தார். அதிமுக வேட்பாளர் தம்பிதுரை காலை 11 மணிக்கே ஆட்சியர் அலுவலகம் வந்து அறையில் வேட்புமனுவைத் தாக்கல் செய்து கொண்டிருந்தார். ஆனால் பகல் 12.30 மணி ஆகியும் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை ஆட்சியர் அறையில் இருந்து வரவில்லை. இதனால் வேட்பாளர் ஜோதிமணி,  செந்தில் பாலாஜி ஆகியோர் நேரம் ஆகிறது எனக் கேட்டனர். உள்ளே தம்பிதுரை இருக்கிறார் என போலீஸார் அவர்களை அனுமதிக்கவில்லை.

எவ்வளவு நேரம் காத்திருப்பது எங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் நாங்கள் மனுத்தாக்கல் செய்ய வேண்டாமா? மணி 12.30 ஆகிவிட்டது, அவருக்கு ஏன் கூடுதல் நேரம் ஒதுக்குகிறீர்கள், நான் தேர்தல் அதிகாரியிடமே கேட்கிறேன் என செந்தில் பாலாஜி உள்ளே செல்ல முயல் அங்கு பணியில்  இருந்த குளித்தலை டிஎஸ்பி சுகுமார், செந்தில் பாலாஜியைத் தடுத்தார். ஒரு கட்டத்தில் செந்தில் பாலாஜியை நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டார். இதனால் செந்தில் பாலாஜி தடுமாறினார். உடன் வந்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்தனர். உங்கள் மீது வழக்குப்போடுவேன் என செந்தில் பாலாஜி ஆத்திரத்துடன் டிஎஸ்பியிடம் வாக்குவாதம் செய்தார்.

அப்போது குறுக்கிட்ட வேட்பாளர் ஜோதிமணி நானும் வேட்பாளர், தம்பிதுரையும் வேட்பாளர்தான். அவர் ஒன்றும் எம்.பி. அல்ல அதைப் புரிந்துகொள்ளுங்கள் என டிஎஸ்பியிடம் வாக்குவாதம் செய்தார். எங்கள் நேரத்தை எடுத்துக்கொள்ள அவர் யார் எனக் கேட்டார்.பொறுங்கம்மா? அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் நான் கேட்டுவிட்டு வருகிறேன் என டிஎஸ்பி பதிலளித்தார். முன்னாள் அமைச்சர் என்றும் பாராமல் செந்தில் பாலாஜியை நெஞ்சில் கை வைத்துத் தள்ளியதை அங்குள்ள ஒருவர் செல்போனில் படம் பிடித்து கசியவிட அது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Black Forest Cakes

CSC Computer Education

Nalam PasumaiyagamThoothukudi Business Directory