» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஜூன் 3-ல் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா : கீதாஜீவன் அறிக்கை!
ஞாயிறு 31, மே 2026 2:46:03 PM (IST)
கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஜூன் 3-ஆம் தேதி அனைத்துப் பகுதிகளிலும் திமுக கொடியேற்றி, இனிப்புகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வெகு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், திமுக வடக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான கீதாஜீவன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் "முன்னாள் முதல்வர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளைக்கழக அமைப்புகள் தோறும் வரும் ஜூன் 3-ஆம் தேதி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். மேலும், கழக கொள்கை விளக்கப் பாடல்களை ஒலிபரப்பச் செய்தும், திமுக கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகளுடன் உணவு வழங்கியும் கழக நிர்வாகிகள் மக்கள் பயனுறும் வகையில் கொண்டாட வேண்டும்.
நவீன தமிழகத்தின் சிற்பி எனப் போற்றப்படும் கலைஞர், தமிழகத்தின் சமூகநீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டத் தந்த எண்ணற்ற முன்னோடித் திட்டங்களை இந்த நன்னாளில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தியாவிலேயே முதல் முறையாக ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமைச் சட்டம் கொண்டு வந்தது. அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு மற்றும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக மகளிர் சுயஉதவிக் குழுக்கள் (SHG) அமைத்தது. நாட்டிலேயே முதல் முறையாகக் காவல்துறை ஆணையம் அமைத்துப் பெண்களைக் காவல்துறையில் பணியமர்த்திப் புரட்சி செய்தது.
நாட்டிலேயே முதன்முதலில் கணினிக் கல்வியைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க இலவச மின்சாரத் திட்டம் தந்தது. தமிழ்மொழியின் தொன்மையைப் பறைசாற்றும் வகையில் மத்திய அரசிடமிருந்து தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வாங்கித் தந்தது. ஏழை எளிய மக்களின் கண்ணியமான வாழ்விடத்திற்காகக் குடிசை மாற்று வாரியம், சமத்துவபுரம் மற்றும் கலைஞர் வீடுகள் திட்டம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டங்களைத் தந்தது.
தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடையச் செய்த கலைஞரின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், சார்பு அணி நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் இளைஞரணியினர் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஜூன் 16-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சனி 13, ஜூன் 2026 7:50:18 PM (IST)

நிகிலேசன்நகர் மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் : மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் மனு!
சனி 13, ஜூன் 2026 7:45:03 PM (IST)

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப் பணிகள் - ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
சனி 13, ஜூன் 2026 7:35:59 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!
சனி 13, ஜூன் 2026 12:06:32 PM (IST)

பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: வாலிபர் பலி; பெண் உட்பட 3 பேர் படுகாயம்
சனி 13, ஜூன் 2026 11:00:30 AM (IST)

புற்றுநோய் கொடுமையால் மனமுடைந்த பெண் தற்கொலை : தூத்துக்குடி அருகே சோகம்
சனி 13, ஜூன் 2026 10:48:52 AM (IST)









