» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு: கட்டிட உரிமையாளர் உட்பட 3 பேர் கைது!
ஞாயிறு 31, மே 2026 9:07:24 AM (IST)
கோவில்பட்டி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்த இளைஞர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புளியங்குளம் காட்டுப் பகுதியில் உள்ள ஒரு தனியாருக்குச் சொந்தமான கட்டிடத்தில், எவ்வித அரசு அனுமதியுமின்றி சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிக்கும் பணி ரகசியமாக நடைபெற்று வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இங்கு வழக்கம்போல் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பயங்கர வெடிவிபத்து நேரிட்டது.
இந்த விபத்தின் அதிர்வில் அந்த பட்டாசு தயாரிப்பு கட்டிடமே இடிந்து தரைமட்டமானது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி விருதுநகர் மாவட்டம் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த மாலதி (25) மற்றும் புளியங்குளத்தைச் சேர்ந்த அய்யப்பன் (30) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த பயங்கர வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (25) என்ற இளைஞர் உடல் கருகி பலத்த காயமடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சூரியபிரகாஷ், நேற்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிப்பு கூடத்தை நடத்த அனுமதித்த கட்டிட உரிமையாளர் மற்றும் இதற்கு காரணமான முக்கிய நபர்கள் உட்பட 3 பேரை போலீஸார் கடந்த புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஜூன் 16-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சனி 13, ஜூன் 2026 7:50:18 PM (IST)

நிகிலேசன்நகர் மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் : மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் மனு!
சனி 13, ஜூன் 2026 7:45:03 PM (IST)

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப் பணிகள் - ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
சனி 13, ஜூன் 2026 7:35:59 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!
சனி 13, ஜூன் 2026 12:06:32 PM (IST)

பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: வாலிபர் பலி; பெண் உட்பட 3 பேர் படுகாயம்
சனி 13, ஜூன் 2026 11:00:30 AM (IST)

புற்றுநோய் கொடுமையால் மனமுடைந்த பெண் தற்கொலை : தூத்துக்குடி அருகே சோகம்
சனி 13, ஜூன் 2026 10:48:52 AM (IST)









