» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலீஸ் விசாரணைக்கு சென்ற அ.தி.மு.க. நிர்வாகி சாவு: உறவினர்கள் போராட்டம்

ஞாயிறு 28, ஏப்ரல் 2024 10:52:24 AM (IST)



பாவூர்சத்திரத்தில் போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய அ.தி.மு.க. நிர்வாகி திடீரென்று இறந்தார். அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரி ஆவுடைக்கன்நாடார் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 70). அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் அ.தி.மு.க. குறும்பலாபேரி கிளை செயலாளராகவும் இருந்து வந்தார். இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக இடத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 24-ந் தேதி ஆண்ட்ரூஸ் கொடுத்த புகாரின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் மறுநாள் தங்கதுரை மற்றும் அவரது மகள் அன்புராணி ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. காலை 10 மணிக்கு சென்ற 2 பேரையும் இரவு 9 மணிக்கு மேல் போலீசார் அனுப்பி வைத்தனா். இதனால் மனமுடைந்த தங்கதுரை வீட்டிற்கு திரும்பியபோது திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அங்கு சிகிச்சை பலனின்றி தங்கதுரை நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் தங்கதுரை உடல் கொண்டு வரப்பட்ட ஆம்புலன்சுடன் காவல் நிலையம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் நிலைய நுழைவு வாயில் மூடப்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘தங்கதுரை உயிரிழப்புக்கு காரணமான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர். மேலும் அங்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் அக்கட்சியினரும் திரண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், ஆலங்குளம் துணை சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து தங்கதுரை உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாவூர்சத்திரத்தில் போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய அ.தி.மு.க. நிர்வாகி திடீரென்று இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory