» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்! – கட்டிடங்கள் சேதம்; கடலோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

திங்கள் 8, ஜூன் 2026 11:25:20 AM (IST)



பிலிப்பின்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் இன்று திங்கள்கிழமை அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்ததுடன், முதற்கட்ட தகவலின்படி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், கடலோரப் பகுதி மக்களுக்குப் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய அதிகாரிகள் அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தெற்கு பிலிப்பின்ஸில் உள்ள மின்டானோ மாகாணத்தின் சரங்கனி பகுதிக்கு மேற்கே சுமார் 24 கிலோமீட்டர் தொலைவில், இந்திய நேரப்படி இன்று திங்கள்கிழமை அதிகாலை 5:07 மணியளவில் மிகச் சக்திவாய்ந்த முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் சுமார் 93 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாகப் பதிவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அதே பகுதியில் மற்றொரு வலுவான நிலநடுக்கமும் பதிவாகியது. பூமிக்கடியில் சுமார் 79 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த இரண்டாவது நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாகப் பதிவாகி உள்ளது.

இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களின் கடுமையான அதிர்வுகளால் மின்டானோ மாகாணத்தில் உள்ள பல வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பலத்த சேதமடைந்தன. நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கி இடிந்து விழும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

இடிபாடுகளில் சிக்கி இதுவரை ஒருவர் பலியாகியுள்ளதாகவும், நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் முதற்கட்ட அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளதால், முழுமையான மீட்பு நடவடிக்கைகளுக்குப் பின்னரே ஒட்டுமொத்தச் சேதங்கள் மற்றும் பலி விபரங்கள் முழுமையாகத் தெரியவரும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பூமியின் மேற்பரப்பு முதல் சுமார் 700 கிலோமீட்டர் ஆழம் வரையிலான எந்தவொரு பகுதியிலும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பிலிப்பின்ஸ் நில அதிர்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, பிலிப்பைன்ஸ் மற்றும் அண்டை நாடான இந்தோனேசியாவின் கடற்கரையை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு இரு நாட்டு அதிகாரிகளும் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

பிலிப்பின்ஸ் நாடு பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாகும். இதற்கு முன்னதாக, கடந்த 1990-ஆம் ஆண்டு பிலிப்பின்ஸில் பதிவான 7.7 ரிக்டர் அளவிலான மிகக் கொடூரமான நிலநடுக்கத்தில் சிக்கி 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாகப் பலியானது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory