» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் கனமழை, நிலச்சரிவுக்கு 153 பேர் பலி: நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம்

ஞாயிறு 30, நவம்பர் 2025 10:41:05 AM (IST)



‘தித்வா’ புயல் காரணமாக இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடரால் 153 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கைக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘தித்வா’ புயலாக வலுப்பெற்றது. இதனால் இலங்கையில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்து வருகின்றனர். மேலும் பலத்த காற்றும் வீசி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. தித்வா புயல் காரணமாக பலத்த காற்று வீசி வருவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து பெருத்த சேதம் ஏற்பட்டு உள்ளன. இதனால் நாட்டின் 35 சதவீத பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கி உள்ளது.

மழை, காற்று தொடர்ந்து மிரட்டுவதால் மின்தடையை சீரமைக்க முடியவில்லை. இதனால் 70 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி நேற்று காலை நிலவரப்படி 153 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 190-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

வடமேற்கு மாகாணத்தின் கலோயாவில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட பஸ்சில் இருந்த பயணிகள் சுமார் 68 பேரை ராணுவ வீரர்கள் நேற்று காலையில் பலமணி நேரம் கடுமையாக போராடி மீட்டனர். நாடு முழுவதும் வெள்ளத்தில் சிக்கிய 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தீவு நாடான இலங்கை சந்தித்த மிகப்பெரிய பேரிடர்களில் ஒன்றாக இந்த தித்வா புயல் பாதிப்பு மாறியுள்ளது. அதுவும் கண்டி, பதுலா மாவட்டங்கள் பெரும் உயிரிழப்புகளை சந்தித்து உள்ளன.இந்த மாவட்டங்களில் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த பகுதியினரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே நாடு முழுவதும் அவசர நிலையை அதிபர் அனுரா குமார திசநாயகே பிறப்பித்து உள்ளார். முன்னதாக நாட்டின் அனைத்துக்கட்சி தலைவர்களும், மருத்துவ துறையினரும் அவசர நிலை பிறப்பிக்குமாறு அதிபரை அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி பேரிடர் பாதித்த இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் ராணுவம், போலீஸ், சுகாதாரத்துறை உள்ளிட்ட அவசரகால பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் பணிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தித்வா புயல் நேற்று இலங்கை கடற்கரைப்பகுதியில் இருந்து விலகி, இந்தியப்பெருங்கடலில் தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி வேகமாக நெருங்கியது.

இலங்கை கடற்பகுதியை விட்டு விலகினாலும், அங்கே 200 மி.மீ. வரை மழைப்பொழிவு இருக்கும் என அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதற்கிடையே ‘தித்வா’ புயலால் நிலைகுலைந்துள்ள இலங்கைக்கு இந்தியா நேசக்கரம் நீட்டியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக பெருமளவில் உதவிகளை அனுப்பியது.

அந்தவகையில் 80-க்கும் மேற்பட்ட பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் 8 டன் தளவாடங்களுடன் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இருந்து சி-130 விமானம் மற்றும் ஐ.எல்-76 விமானம் இலங்கைக்கு விரைந்தன. மேலும் 21 டன் நிவாரணப்பொருட்களும் அதில் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் உணவு, மருந்து, போர்வைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கியிருந்தன.

கொழும்பு பாண்டாரநாயகா விமான நிலையத்தை நேற்று அதிகாலையில் அடைந்த இந்த விமானங்களை இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரிகள் வரவேற்று பொருட்களை பெற்றுக்கொண்டனர்.

பின்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்த இந்திய பேரிடர் மீட்புக்குழுவினர், 2 குழுக்களாக பிரிந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தொடங்கினர். அவர்களுடன் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் 4 மோப்ப நாய்களும் உதவிக்காக ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. முன்னதாக இந்தியாவின் ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் மற்றும் ஐ.என்.எஸ். உதயகிரி கப்பலில் ஏற்கனவே நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன.

‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற பெயரில் இந்தியா இந்த மீட்புப்பணிகளில் இறங்கியிருப்பதாக இந்திய விமானப்படை கூறியுள்ளது. அண்டை நாடு முதலில் என்ற உணர்வின் அடிப்படையில் இலங்கைக்கு இந்த தேவையான நேரத்தில் இந்தியா உறுதியாக நிற்பதாகவும் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருந்தது.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு கடல் மற்றும் வான் வழியாக 27 டன் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ள வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், மேலும் உதவிகள் விரைவில் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory