» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் தேர்வு: காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்!

சனி 8, ஜூன் 2024 4:45:42 PM (IST)

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை ஏகமனதாக தேர்வு செய்து காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் நீட்டிக்கப்பட்ட செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், அம்பிகா சோனி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொள்ளுதல், கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமான போக்கைக் கடைபிடிப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அந்த வரிசையில் முக்கிய முடிவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை முன்மொழிந்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கே.சி.வேணுகோபால், "மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியை மக்களவையில் வழிநடத்திச் செல்ல ராகுல் காந்தி சிறந்த தேர்வாக இருப்பார்” என்று கூறினார்.

அப்போது, ராகுல் காந்தி இந்த முடிவை ஏற்றுக் கொள்வாரா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கே.சி.வேணுகோபால், "ராகுல் காந்தி இதன் மீது விரைவில் முடிவெடுப்பார்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சி காணத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் காரிய கமிட்டியில் 4 மாதங்களுக்கு முன்னால் இருந்த நிலைமை தற்போது முற்றிலுமாக மாறிவிட்டது” என்றார்.

ஒற்றுமை முக்கியம்: முன்னதாக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இந்த தருணத்தில், இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளைப் பாராட்ட விரும்புகிறேன். வெவ்வேறு மாநிலங்களில் உள்ள அனைத்து கூட்டணி கட்சிகளும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து ஒற்றுமையாகவும் ஒன்றாகவும் செயல்படுவோம்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் எழுப்பிய பிரச்சினைகள் பொது மக்களின் கவலைக்குரிய பிரச்சினைகள். அவை எப்போதும் நம் கவனத்தில் இருக்கும். நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் பொதுமக்களின் இந்தக் கேள்விகளை தொடர்ந்து எழுப்புவோம்.

தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை காங்கிரஸ் பணிவுடன் ஏற்கிறது. நாட்டின் பெரும் பகுதி மக்கள் நம்மை நம்பியுள்ளனர். அவர்களின் நம்பிக்கையை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். நாம் ஒழுக்கமாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமது பணி தொடரும். 24 மணி நேரமும், 365 நாட்களும், மக்கள் பிரச்சினைகளை எழுப்பி மக்கள் மத்தியில் நாம் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

உண்மJun 12, 2024 - 12:02:19 PM | Posted IP 172.7*****

தேவை இல்லாமல் ஊரு ஊராக சுற்றுவது தான் இத்தாலி பப்பு வின் வேலை

INDIANJun 10, 2024 - 04:07:52 PM | Posted IP 172.7*****

SUPER JOKER

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory