» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஒடிசாவை தமிழர் ஆளலாமா? அமித் ஷா கடும் விமர்சனம்: வி.கே. பாண்டியன் பதில்!!
வியாழன் 23, மே 2024 12:18:10 PM (IST)
ஒடிசாவை தமிழர் ஆளலாமா? என்று விமர்சித்த அமித் ஷாவுக்கு வி.கே. பாண்டியன் பதில் அளித்துள்ளார்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலராக தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன், 10 ஆண்டுகளாக பணியாற்றினார். முதல்வரின் நம்பிக்கைக்கு உரியவராக மாறிய அவர், தன் அரசுப் பதவியை ராஜினாமா செய்து கடந்த ஆண்டு பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். ஒடிசாவில் நடக்கும் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில், பிஜு ஜனதா தளத்தின் பிரசாரத்தை பாண்டியன் வழிநடத்தி வருகிறார்.
ஒடிசாவின் பிரசித்தி பெற்ற புரி ஜெகந்நாதர் கோவிலின் விலை உயர்ந்த நகைகளை வைத்துள்ள கருவூலத்தின், உள் அறை சாவி 2018ல் காணாமல் போனது.அது குறித்து ஆய்வு செய்ய, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஒடிசாவில் நேற்று முன் தினம் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, 'கருவூலத்தின் சாவிகள், தமிழகத்துக்கு சென்றிருக்கும்' என, பாண்டியனை மறைமுகமாக விமர்சித்தார்.
மேலும், மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று பேசுகையில், ''தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆள அனுமதிக்கலாமா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒடியா மொழி பேசும் இளைஞர் இம்மாநிலத்தை ஆட்சி செய்வார்,'' என, பாண்டியனை குறிவைத்து நேரடியாக தாக்கினார்.
இதற்கு, பாண்டியன் நேற்று அளித்துள்ள பதில்: கருவூல சாவிகள் குறித்து பிரதமருக்கு நிறைய தகவல் தெரியும் எனில், அந்த சாவிகள் எங்கு உள்ளன என்பதை அவரே கண்டுபிடித்து சொல்லட்டும். கருவூலத்தின் உள் அறைகள் திறக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகின்றன. வெளி அறையை மட்டுமே தற்போது பயன்படுத்தி வருகிறோம். கருவூலத்தை திறக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'டூப்ளிகேட்' சாவிகளை வைத்து விரைவில் திறப்போம். இவ்வாறு அவர் கூறினார்.