» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நியூஸ் க்ளிக் நிறுவனர் கைது சட்டவிரோதம்: விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதன் 15, மே 2024 11:56:26 AM (IST)



நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிர்புர் புர்க்யஸ்தா ஊபா (UAPA) எனும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்றும் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கடந்த ஆண்டு, 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை நியூஸ் கிளிக் நிறுவனம் தொடங்கியது. வெளிநாட்டில் இருந்து ஆதரவைப் பெற்று இந்த பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த நெவில்ராய் சிங்காம், நியூஸ் க்ளிக் இணையதளத்துக்கு நிதி உதவி செய்கிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார்.

இதையடுத்து News Click செய்தி இணைய தள நிறுவனமானது வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக 3 ஆண்டுகளில் ரூ38.05 கோடி பணம் பெற்றது என வழக்கு தொடரப்பட்டது. சீனாவுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடவே வெளிநாடுகளில் இருந்து இந்தப் பணம் பெறப்பட்டது என்பதும் புகார். சட்டவிரோத இந்த பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. மேலும் டெல்லியில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனைகளின் போது சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டில் தங்கி இருந்த செய்தியாளர் ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் இருந்த செல்போன், லேப்டாப் ஆகியவையும் பறிமுதல் செய்யபட்டன.

அத்துடன் நியூஸ் க்ளிக் (நியூஸ் கிளிக்) செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிர்புர் புர்க்யஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பாதுகாப்புச் சட்டம் "ஊபா” (UAPA)-ன் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையாகவும் வெடித்தன. இந்த நடவடிக்கைக்கு "இந்தியா” கூட்டணி தலைவர்கள் கடும் கண்டனமும் தெரிவித்திருந்தனர். இதனிடையே தமது கைது நடவடிக்கைக்கு எதிராக பிர்புர் புர்க்யஸ்தா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பிர்புர் புர்க்யஸ்தாவை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்தது சட்டவிரோதம் என்றும் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory