» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரசியல் தலைவர்களின் பதிவுகளை நீக்க எக்ஸ் தளத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

புதன் 17, ஏப்ரல் 2024 10:12:34 AM (IST)

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் பதிவுகளை நீக்க எக்ஸ் தளத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் சில பதிவுகளை நீக்கிய எக்ஸ் நிர்வாகம், வெளிப்படைத்தன்மை கருதி தேர்தல் ஆணையத்தின் உத்தரவை பொதுவெளியில் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. வருகின்ற வெள்ளிக்கிழமை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், அதுவரை நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்.

இந்த நிலையில், பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை குறிப்பிட்டு, தேர்தல் நடத்தை மீறியுள்ளதால் அதனை நீக்குமாறு எக்ஸ் நிர்வாகத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட இரண்டு பதிவுகளையும், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிகார் துணை முதல்வர் சம்ராத் செளத்ரி ஆகியோரின் இரண்டு பதிவுகளை நீக்கக் கோரி, ஏப்ரல் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் எக்ஸ் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில், தேர்தல் நடத்தை விதிமுறை பகுதி 1-ஐ மீறி குறிப்பிட்ட 4 பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளதால் அதனை உடனடியாக நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், இந்த பதிவுகளை நீக்கவில்லை என்றால் எக்ஸ் தளத்தின் மீது தன்னார்வ நெறிமுறைகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நான்கு பதிவுகளையும் தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ள எக்ஸ் நிர்வாகம், தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவில் உடன்பாடு இல்லை என்றும், வெளிப்படைத்தன்மை கருதி ஆணையத்தின் உத்தரவுகளை பொதுவெளியில் வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory