» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேகாலயா சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டி: பாஜக அறிவிப்பு

வெள்ளி 3, பிப்ரவரி 2023 12:19:36 PM (IST)

மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும், நாகாலாந்தில் 20 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது.

வடகிழக்கு மாநிலமான திரிபுரா வில் வரும் 16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் வரும் 27-ம் தேதியும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் மேகாலயா, நாகாலாந்து தேர்தல் குறித்து பாஜக செயலாளர் ரிதுராஜ் சின்ஹா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு தாராளமாக நிதியுதவி வழங்கி வருகிறது. ஆனால் மாநில அரசுகள் திறம்பட செயல்படாததால் பல்வேறு திட்டங்களின் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதோடு ஊழல் விவகாரங்களால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள், பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இதை முன்னிறுத்தி மேகாலயாவின் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும். மோடியின் சக்தி என்பதை மையமாகக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்.

நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடும். மீதமுள்ள 40 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும். மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக அபார வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இந்த கூட்டணி அரசில் பாஜகவும் இடம்பெற்றிருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து விலகிய பாஜக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் ஆளும் கூட்டணியை எதிர்த்து பாஜக களமிறங்குகிறது.

நாகாலாந்தில் முதல்வர் நெய்பியு ரியோ தலைமையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory