» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து: 5 பேர் பலி
வெள்ளி 22, ஜனவரி 2021 9:19:12 AM (IST)

கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் புனே சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடத்த மராட்டிய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கிய கோவிஷீல்டு கரோனா தடுப்பு மருந்தை மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இந்த தடுப்பூசி கடந்த 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு மற்றும் வினியோகம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், சீரம் நிறுவனம் முன் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சீரம் நிறுவனத்தில் நேற்று பிற்பகல் 2.45 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அந்த நிறுவன வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் 4-வது மற்றும் 5-வது மாடியில் தீ பற்றி எரிந்தது. தகவலின் பேரில் உடனடியாக தீயணைப்பு படையினர் 15 வாகனங்களில் அங்கு விரைந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் விரைந்தனர். தீயணைப்பு படையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் கட்டிடத்தில் சிக்கிய 9 பேர் மீட்கப்பட்டனர்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வேலை செய்து கொண்டு இருந்த 5 பேர் உயிரிழந்து கிடந்தனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதலில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர்பூனவாலா தெரிவித்தார். பின்னர் 5 பேர் உயிரிழந்தது தெரியவந்ததை அடுத்து அவர் வேதனை தெரிவித்தார். இந்த தீ விபத்தால் கோவிஷீல்டு மருந்து தயாரிப்பு பிரிவுக்கு பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டது. சீரம் நிறுவன வளாகத்தில் உள்ள மருந்து தயாரிப்பு பிரிவில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள கட்டிடத்தில் தான் தீ பிடித்ததாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் அது கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டிடம் என்றும் கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து அதிர்ச்சி அடைந்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, புனே மாநகராட்சி கமிஷனரை தொடர்பு கொண்டு பேசினார். தேவையான உதவிகளை செய்து தீயை முற்றிலும் அணைப்பதை உறுதி செய்யும்படி உத்தரவிட்டார். மேலும் உத்தவ் தாக்கரே கூறுகையில், "மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல முதற்கட்ட விசாரணையில் கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் கட்டிடத்தில் தீவிபத்து ஏற்படவில்லை என்றும், பாதிப்புக்குள்ளான கட்டிடத்தில் காசநோய் தடுப்பு மருந்து தயாரிக்கப்படுவதும் தெரியவந்துள்ளது" என்றார்.
தீ விபத்து குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டு இருப்பதாக மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறினார். தீ விபத்தால் கரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணியில் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். முன்னதாக கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை சுற்றுவட்டார பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கட்டிடத்தில் கரும்புகை எழுந்த படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 31 வரை நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:45:27 PM (IST)

கரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு
வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:25:13 PM (IST)

ட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்: மம்தா பானர்ஜி
வியாழன் 25, பிப்ரவரி 2021 10:35:34 AM (IST)

திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி தங்க சங்கு- சக்கரம் : தமிழக பக்தர் காணிக்கையாக வழங்கினார்
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:49:52 AM (IST)

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்: குடியரசு தலைவர் திறந்து வைத்தார்
புதன் 24, பிப்ரவரி 2021 5:26:07 PM (IST)

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதன் 24, பிப்ரவரி 2021 4:59:08 PM (IST)
