» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு: மாநில வாரியாக வெற்றி யாருக்கு?

சனி 1, ஜூன் 2024 9:38:38 PM (IST)

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் பா.ஜனதா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும் என்றும், தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற்றது. நேற்று 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது. தொடர் ஓட்டம் போல் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்ற ஆவல் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்தநிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள், கருத்துக்கணிப்பில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை எடுத்தன. நேற்று மாலை 6 மணிக்கு நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிவடைந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதன் விவரம் பின்வருமாறு:-

தமிழகத்தில் தி.மு.க. அமோகம்

தமிழகத்தை பொருத்தவரை முக்கிய தொலைக்காட்சிகள் எடுத்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.

இந்தியா டுடே கணிப்பில் தி.மு.க. கூட்டணி 26 முதல் 30 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 6 முதல் 8 இடங்களையும் பா.ஜனதா கூட்டணி 1 முதல் 3 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.என்.என். நியூஸ்18 எடுத்த கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணி 36 முதல் 39 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 2 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி 1 முதல் 3 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏ.பி.பி. சி-ஓட்டர் நிறுவனம் தி.மு.க. கூட்டணிக்கு 37 முதல் 39 இடங்கள் வரையிலும், பா.ஜனதா கூட்டணிக்கு 2 இடங்கள் வரையும் கிடைக்கும் என்றும் கூறுகிறது.

ரிபபிளிக் மேட்ரிக்ஸ் கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணி 37 இடங்களையும், அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கூட்டணிகள் தலா ஒரு இடத்தையும் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் ரிபபிளிக் பிமார்க் கருத்துக்கணிப்பு முடிவு தி.மு.க. கூட்டணி 38 தொகுதிகளையும், மற்றவர்கள் 1 இடத்தையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது.

டி.வி. 9 தனது கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜனதா கூட்டணி 4 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணி 34 முதல் 38 இடங்களைப் பிடிக்கலாம் என்றும், பா.ஜனதா 0 முதல் 5 இடங்களைப் பிடிக்கலாம் என்றும், அதிமுக ஒரு இடத்தைக்கூட பிடிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான கருத்துக்கணிப்பு

பா.ஜனதாவுக்கு அதிக இடங்கள்: ஜன்கிபாத் கருத்துக்கணிப்பின்படி பா.ஜனதா கூட்டணிக்கு 362 முதல் 392 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கூட்டணிக்கு 141 முதல் 161 இடங்கள் வரையும், மற்றவர்களுக்கு 10 முதல் 20 இடங்கள் வரையும் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ் எடுத்த கருத்துக்கணிப்பில் பா.ஜனதா கூட்டணிக்கு 371 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 175 இடங்களும் மற்றவர்களுக்கு 47 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ரிபபிளிக் டி.வி. கருத்துக்கணிப்பு பா.ஜனதா கூட்டணி 359 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 154 இடங்களையும், மற்றவர்கள் 30 இடங்களையும் கைப்பற்றுவார்கள் என்கிறது.

இந்தியா நியூஸ் தொலைக்காட்சி பா.ஜனதா 371 தொகுதிகளிலும், காங்கிரஸ் 125 தொகுதிகளிலும், மற்றவர்கள் 47 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கிறது.

என்.டி.டிவி. கருத்துக்கணிப்பில் பா.ஜனதா 371 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 125 இடங்களையும் மற்றவர்கள் 47 இடங்களையும் கைப்பற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.என்.என்.

பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 355 முதல் 370 இடங்களைப் பிடிக்கலாம் என்றும், இந்தியா கூட்டணி 125 முதல் 140 இடங்களைப் பிடிக்கலாம் எனவும், இதர கட்சிகளுக்கு 42 முதல் 52 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ்

தேசிய அளவில் உள்ள 543 தொகுதிகளில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 358 தொகுதிகளும், இந்தியா கூட்டணிக்கு 152 தொகுதிகளும், இதர கட்சிகளுக்கு 33 தொகுதிகளும் கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா:-

ரிபப்ளிக் டிவி மேட்ரைஸ்

கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணிக்கு 21 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 7 இடங்களும் கிடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா டுடே

பா.ஜனதா கூட்டணிக்கு 23 முதல் 25 தொகுதிகள் கிடைக்கலாம் என்றும், இந்தியா கூட்டணிக்கு 3 முதல் 5 இடங்கள் கிடைக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கேரளா:-

இந்தியா டுடே

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 17 முதல் 18 தொகுதிகளும், பா.ஜனதா கூட்டணிக்கு 2 முதல் 3 தொகுதிகளும், இடது ஜனநாயக முன்னணிக்கு 0 முதல் 1 இடமும் கிடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஏபிபி நியூஸ் - சிவோட்டர்

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 17 முதல் 19 இடங்கள் கிடைக்கும் எனவும், பா.ஜனதா கூட்டணிக்கு 1 முதல் 3 தொகுதிகளும் கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலின் போது பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என்று கூறப்பட்டது. அதேசமயம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA), சுமார் 100 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டது.கருத்துக் கணிப்புகள் சரி என்று நிரூபிக்கும் வகையிலேயே உண்மையான தேர்தல் முடிவுகளும் இருந்தது. அதன்படி பா.ஜனதா 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 350 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸ் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory