» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க தனி ஆணையம் : அன்புமணி வலியுறுத்தல்
திங்கள் 2, அக்டோபர் 2023 3:51:25 PM (IST)
ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் சனி, ஞாயிறு, காந்தியடிகள் பிறந்தநாள் என 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் சென்றவர்கள் இன்று மீண்டும் சென்னைக்கு திரும்ப வேண்டும். ஏராளமான மக்கள் வெளியூர்களுக்கு சென்றிருப்பதையும், அவர்கள் அனைவரும் சென்னைக்கு திரும்புவதற்கு தேவையான அளவுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படாததையும் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் ஆம்னி பேருந்து நிர்வாகங்கள், அவற்றின் கட்டணத்தை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளன. அக்டோபர் 2ம் நாளான இன்று இரவு நெல்லையில் இருந்து சென்னைக்கு திரும்ப அதிக அளவாக ரூ.4,460 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நெல்லையை விட குறைந்த தொலைவு கொண்ட மதுரையில் இருந்து சென்னைக்கு, அதை விட அதிகமாக ரூ.4499 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.4970, திருச்சியிலிருந்து சென்னைக்கு ரூ.4410 கட்டணம் பெறப்படுகிறது. பூசை விடுமுறை நாட்களுக்காக வரும் 20-ஆம் நாள் சென்னையிலிருந்து மதுரை செல்லவும், விடுமுறை முடிந்து 24ம் நாள் சென்னைக்கு திரும்பவும் அதிக அளவாக ரூ.4440 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே நாட்களில் சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல ரூ.4560, அங்கிருந்து சென்னை திரும்ப ரூ.4620 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல ரூ.3700, சென்னைக்கு திரும்ப ரூ.3753 என்ற அளவிலும், சென்னையிலிருந்து திருச்சிக்கு ரூ.4500, அங்கிருந்து சென்னைக்கு ரூ.4440 என்ற அளவிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் நெருங்க நெருங்க இந்தக் கட்டணம் இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே நாட்களில் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லவும், அங்கிருந்து சென்னை திரும்பவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் இருக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்துகளில் ரூ.459, படுக்கை வசதி பேருந்துகளில் ரூ.920 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை விட தனியார் பேருந்துகளில் 10 மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதே காலத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் செல்ல ரூ.3,419 மட்டும் தான் கட்டணம். விமானத்தை விட ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் போதிலும், அதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான காரணமும் நமக்கு விளங்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை குறித்து தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்து வருகிறது.
ஆனால், அரசோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பெயரளவில் சில பேருந்துகளுக்கு மட்டும் சில ஆயிரங்களை தண்டமாக விதித்து விட்டு கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக கூறி விடுகிறது. சில நேரங்களில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர், தாம் யார் என்பதையே மறந்து விட்டு, "ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சேவை செய்யவில்லை. அரசு பேருந்து கட்டணத்தை, தனியார் பேருந்து கட்டணத்தோடு ஒப்பிடுவது தவறு.
தனியார் பேருந்து கட்டணம் அதிகம் என்று தெரிந்துதான் மக்கள் பயணம் செய்கிறார்கள். அவர்கள் புகாரும் செய்யவில்லை. தனியார் பேருந்துகளின் கட்டணம் ஏழை மக்களை பாதிக்கவில்லை" என்று விளக்கம் அளிக்கிறார். இது தான் தனியார் ஆம்னி பேருந்துகள் அவற்றின் விருப்பம் போல கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதற்கான துணிச்சலை அளிக்கிறது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை காலம் காலமாகவே தொடர்கிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை ஆணையிட்டிருக்கிறது.
"ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அவற்றின் உரிமையாளர்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதிப்பது சட்ட விரோதமானது. மோட்டார் வாகன சட்டத்தின் 67வது பிரிவின் படி ஆம்னி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு தான் நிர்ணயிக்க வேண்டும். கட்டணத்தை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது குறித்து அரசுக்கு பரிந்துரை அளிக்க உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 5 பேர் குழுவை அமைக்க வேண்டும்" என்று 2016ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அந்தத் தீர்ப்பின் மீது 7 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டும் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையத்தை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு அமைக்க வேண்டும். ஆணையம் நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக் கணக்கில் தண்டம் விதிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புயல், வெள்ள மீட்பு பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும்: ராகுல் காந்தி
செவ்வாய் 5, டிசம்பர் 2023 3:41:45 PM (IST)

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மிகுந்த ஏமாற்றம் தருகிறது: கே.எஸ்.அழகிரி
திங்கள் 4, டிசம்பர் 2023 4:34:38 PM (IST)

கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றி அமைக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:12:26 AM (IST)

ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: சச்சின் பைலட் நம்பிக்கை
சனி 25, நவம்பர் 2023 11:45:28 AM (IST)

வெற்றியோ தோல்வியோ, நாங்கள் உங்களை நேசிக்கிறோம்: இந்திய அணிக்கு ராகுல் ஆறுதல்
திங்கள் 20, நவம்பர் 2023 11:34:14 AM (IST)

திமுக ஆட்சியில் சுகாதாரத் துறை சீரழிந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
செவ்வாய் 14, நவம்பர் 2023 5:46:09 PM (IST)

bullshitOct 6, 2023 - 05:19:25 AM | Posted IP 172.7*****