» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஸ்டெர்லைட் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா? : ஆளுநருக்கு மநீம கண்டனம்..

சனி 8, ஏப்ரல் 2023 3:15:04 PM (IST)

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி விமர்சிப்பதா?என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கையில், "மாநிலத்தின் கண்ணியத்திற்குரிய பொறுப்பில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களிடையே பேசும்போது அந்த கண்ணியம் பற்றிய கவலை சிறிதுமின்றி பேசியுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, பலரும் உயிரிழந்த சூழலில், பாதிக்கப்பட்ட மக்கள் பலகாலம் போராடினர். துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்த பின்னரே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அப்படிப்பட்ட போராட்டம், வெளிநாட்டு நிதியால்தான் கட்டமைக்கப்பட்டது என்று ஆளுநர் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்ட விதியின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் ஆளுநர், எதிர்க்கட்சியினர் போலப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஆளுநர் கூறிய தகவல் உண்மையாக இருக்குமானால், மத்திய உள்துறையிடம் புகார் செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது தானே? அதைவிடுத்து, மாணவர்கள் மத்தியில் பேசுவது, உண்மைக்கு மாறானதும், அவதூறு என்பதையும் அப்பட்டமாக காட்டுகிறது. வெளிநாட்டு நிதி தொடர்பாக தான் குறிப்பிட்ட விவரங்களை, தமிழக காவல் துறைக்கோ அல்லது ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கோ பகிர்ந்துள்ளாரா என்பதை ஆளுநர் விளக்க வேண்டும்.

எதிர்காலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளில் அமரப்போகும் மாணவர்கள் மத்தியில் இப்படிப் பேசுவது, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுவோர் குறித்த எதிர்மறைப் பிம்பத்தைக் கட்டமைத்துவிடும். உரிமைகளுக்காகப் போராடும் ஜனநாயக அடிப்படையையே இந்தப் பேச்சு குழிதோண்டி புதைத்துவிடும். அரசியல் சாசனப் பொறுப்பில் இருந்துகொண்டு, தனிப்பட்ட முறையில் தனக்குத் தோன்றியதை எல்லாம் பொதுவெளியில் பேசுவதை இனியாவது ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அறவழியில் போராடும் மக்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் வகையிலும், மக்கள் உணர்வுகளை மதிக்காமலும் ஆளுநர் பேசியிருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர் இருப்பது ராஜ்பவன், "ரவி பவன்” அல்ல என்பதை மாண்புமிகு ஆளுநர் நினைவில்கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

இவருApr 10, 2023 - 05:53:52 PM | Posted IP 162.1*****

சினிமாவில் நடிகர் மட்டுமல்ல, அரசியலில் நடிகர் தான், இவருக்கு ஒட்டு போட்டால் நடிகை கூட வெளிநாட்டிற்கு ஊரு சுற்றுவதும், ஹெலிகாப்டரில் பறந்து வருவதும் தான் வேலை. அவளவுதான்

ஜெ . தொண்டன்Apr 10, 2023 - 04:13:05 PM | Posted IP 162.1*****

வாங்கின காசுக்கு கூவ ஆரம்பிச்சுட்டார் .....ஜெயலலிதா என்ற ஆளுமை தலைவர் இல்லாததால் இந்த மாதிரி சில நடிகர்கள் காசுக்காக கூவுவார்கள்.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory