» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஜி.எஸ்.டி வரி விதிப்பால் இந்தியாவில் வறுமை அதிகரிக்கும்- டாக்டர் ராமதாஸ்

செவ்வாய் 17, ஜனவரி 2023 12:38:08 PM (IST)

ஜி.எஸ்.டி வரி விதிப்பால் இந்தியாவில் வறுமை அதிகரிக்குமே தவிர, ஒருபோதும் ஒழியாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தியாவின் வருமானத்தையும், வளர்ச்சியையும் பெருக்குவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஏழை மக்களை கசக்கிப் பிழிகிறது என்று தொண்டு நிறுவனம் ஒன்றின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிரானது என்று தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டு இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் வரி அடுக்குகள் குறைக்கப்பட்டாலும் கூட, கீழ் அடுக்குகள் தான் அகற்றப்படுமெனவும், உயர் அடுக்குகள் அதே அளவில் நீடிக்கும் என்றும் மத்திய அரசு கூறுகிறது. இதனால் ஜி.எஸ்.டி வரி விகிதமும், அதனால் மக்களுக்கு ஏற்படும் சுமைகளும் அதிகரிக்குமே தவிர ஒரு போதும் குறையாது.

கடந்த 6 ஆண்டுகளில் பெரு நிறுவனங்களுக்கு ரூ.11.17 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது; 2019-ம் ஆண்டில் கார்ப்பரேட் வரி 30சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாகவும், புதிய நிறுவனங்களுக்கு 15 சதவீதமாவும் குறைக்கப்பட்டது; 2020-21-ம் ஆண்டில் மட்டும் பெரு நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய வரிச்சலுகைகளின் மதிப்பு ரூ.1.03 லட்சம் கோடி ஆகும். ஆனால், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்த விதமான வரிச்சலுகைகளும் வழங்கப்படவில்லை.

இதே கொள்கைகளை மத்திய அரசு தொடர்ந்தால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள்; ஏழைகள் மேலும் மேலும் ஏழைகள் ஆவார்கள். அதனால், இந்தியாவில் வறுமை அதிகரிக்குமே தவிர, ஒருபோதும் ஒழியாது. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மட்டும் தான் நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்பதே அறியாமை தான். உலகின் பெரும் பணக்கார நாடு அமெரிக்கா தான். ஆனால், அங்கு ஜி.எஸ்.டியும் இல்லை; ஒரே நாடு ஒரே வரி முறையும் இல்லை. 

ஆனால், அங்கு பொருளாதாரம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. வரி விதிப்புகள் பணக்காரர்களுக்கு வரமாகவும், ஏழைகளுக்கு சாபமாகவும் அமைந்து விடக் கூடாது. எனவே, அரிசி உள்ளிட்ட அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும்; பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக வரியும், ஏழைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு குறைந்த வரியும் விதிக்கும் வகையில் ஜி.எஸ்.டி வரி விதிப்பை அரசு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

வன்னியர்களில்Jan 19, 2023 - 07:41:36 PM | Posted IP 162.1*****

எத்தனை பேர் குடிகாரர்கள் என்று சொல்ல வேண்டும் முதலில்.... அப்புறம் மத்ததை பேசலாம்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory