» சினிமா » செய்திகள்
இயக்குநர் மணிகண்டனின் தேசிய விருதை திருப்பியளித்த திருடர்கள்!
செவ்வாய் 13, பிப்ரவரி 2024 4:34:26 PM (IST)
இயக்குநர் மணிகண்டனின் தேசிய விருதைத் திருடிச்சென்ற திருடர்கள் அதனை திருப்பியளித்துள்ளனர்.
கடைசி விவசாயி படத்தின் மூலம் பெரிய கவனம் பெற்றவர் இயக்குநர் மணிகண்டன். காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை போன்ற சிறந்த படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கினார். இவர் தன் குடும்பத்துடன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வாழ்ந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் அடுத்த படத்தின் பணிகளை கவனிக்க குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார்.
அவர் வீட்டில் இல்லாததைத் தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் கடந்த பிப்.8 ஆம் தேதி அவர் வீட்டிற்குள் நுழைந்து ரூ.1 லட்சம், 5 சவரண் நகை மற்றும் கடைசி விவசாயி படத்துக்காக அவர் பெற்ற 2 தேசிய விருது பதக்கங்களையும் திருடிச்சென்றனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருடுபோனது தேசிய விருது என்பதால் காவல்துறையினர் தீவிரமாகக் கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், மணிகண்டனின் வீட்டு முகப்பில் ஒரு பையில் திருடிச் சென்ற வெள்ளிப் பதக்கங்களுடன் ஒரு குறிப்பும் இருந்திருக்கிறது. அதில், ‘அய்யா எங்களை மன்னித்துவிடுங்கள். உங்கள் உழைப்பு உங்களுக்கு..’ என பதக்கத்தைத் திருடிச் சென்றதற்காக மன்னிப்பு கேட்டு அதனைத் திருப்பிக் கொடுத்துள்ளனர். இதை வைத்தது யார் என்கிற கோணத்தில் காவல்துறை விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.