» சினிமா » செய்திகள்

பணமோசடி வழக்கு : தயாரிப்பாளா் ஞானவேல்ராஜா விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

வெள்ளி 24, ஜூலை 2020 10:46:42 AM (IST)

பணமோசடி வழக்கு விசாரணைக்காக திரைப்படத் தயாரிப்பாளா் ஞானவேல்ராஜா வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி ராமநாதபுரம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் முன் நேரில் ஆஜராக வேண்டும் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோசடி வழக்கு விசாரணைக்காக வெள்ளிக்கிழமை (ஜூலை 24) நேரில் ஆஜராக பிரபல திரைப்படத் தயாரிப்பாளா் ஞானவேல்ராஜாவுக்கு ராமநாதபுரம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் சம்மன் அனுப்பினாா். இதனையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜா மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், கரோனா நோய்த் தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வது கடினம். எனவே காணொலி காட்சி மூலம் விசாரணையை நடத்தவேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையைப் பரிசீலிக்க துணைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடவேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை, நீதிபதி ஜி.கே. இளந்திரையன் காணொலி காட்சி மூலம் விசாரித்தாா். அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞா் விஜயன் சுப்ரமணியன், கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ‘மகாமுனி’ என்ற திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட நீதிமணி என்பவருக்கு உரிமம் வழங்கப்பட்டது. இதற்காக அவா் வழங்க வேண்டிய தொகை ரூ.3.95 கோடியை மனுதாரருக்கு வழங்கவில்லை. இந்த நேரத்தில் ராமநாதபுரம் பஜாா் காவல் நிலையத்தில் நீதிமணி மீது பதிவான ரூ.3 கோடி மோசடி வழக்கில் மனுதாரரை நேரில் ஆஜராக போலீஸாா் சம்மன் அனுப்பியுள்ளனா். 

பொதுமுடக்கத்தைக் கருத்தில் கொண்டு மனுதாரரிடம் காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த போலீஸாருக்கு உத்தரவிடவேண்டும் என வாதிட்டாா். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞா் எஸ்.காா்த்திகேயன், மனுதாரரை விசாரணைக்காக நேரில் ஆஜராக குற்றவியல் விசாரணை முறை சட்ட பிரிவு 41 ( ஏ) வின் கீழ் போலீஸாா் சம்மன் அனுப்பியுள்ளனா். மேலும் ரூ.3 கோடி மோசடி செய்ததாக பதிவான வழக்கு என்பதால், காணொலி காட்சி மூலம் விசாரித்தால் சரியாக இருக்காது என வாதிட்டாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இது பெருந்தொகை மோசடி தொடா்பாக பதிவான வழக்கு. எனவே காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட முடியாது. மனுதாரா் முறையாக விண்ணப்பித்து இணையதள அனுமதி சீட்டு பெற்று வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி ராமநாதபுரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் முன் ஆஜராக வேண்டும். ஒருவேளை மனுதாரா் ஆஜராகாத பட்சத்தில் அவருக்கு எதிரான சட்டப்படியான நடவடிக்கையை துணைக் கண்காணிப்பாளா் எடுக்கலாம் என உத்தரவிட்டுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory