» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தொடர்ந்து 8 சிக்சர் விளாசி மேகாலயா வீரர் உலக சாதனை: 11 பந்தில் அரைசதம் அடித்தும் அசத்தல்!

திங்கள் 10, நவம்பர் 2025 11:12:25 AM (IST)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மேகாலயா வீரர் ஆகாஷ் சவுத்ரி தொடர்ச்சியாக 8 சிக்சர் விரட்டி புதிய உலக சாதனை படைத்தார்.

91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. உள்நாட்டின் பிரதான முதல்தர கிரிக்கெட்டான ரஞ்சி போட்டி ‘எலைட்’, ‘பிளேட்’ என இரு பிரிவாக நடத்தப்படுகிறது.

இதில் ‘பிளேட்’ பிரிவில் சூரத்தில் தொடங்கியுள்ள அருணாசல பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேகாலயா அணி முதல் இன்னிங்சில் 127 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 628 ரன்களில் டிக்ளேர் செய்து மலைக்க வைத்தது. ஆர்பித் பாட்டேவாரா இரட்டை சதமும் (207 ரன்), கேப்டன் கிஷான் லிங்டோ (119 ரன்), ராகுல் தலால் (144 ரன்) ஆகியோர் சதமும் அடித்தனர். 7-வது விக்கெட்டுக்கு நுழைந்த ஆகாஷ் சவுத்ரி சிக்சர் மழை பொழிந்து புதிய வரலாறு படைத்தார்.

இடக்கை சுழற்பந்து வீச்சாளர் லிமார் தபியின் ஓவரில் 6 பந்தையும் சிக்சருக்கு பறக்கவிட்டு ஆகாஷ் சவுத்ரி அட்டகாசப்படுத்தினார். முதல்தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய 3-வது வீரர் ஆவார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேர்பீல்டு சோபர்ஸ், இந்தியாவின் ரவிசாஸ்திரி ஆகியோர் இச்சாதனையை செய்திருந்தனர்.

அத்துடன் ஆகாஷ் சவுத்ரி நிற்கவில்லை. அடுத்த ஓவரில் சந்தித்த முதல் 2 பந்தையும் சிக்சருக்கு கிளப்பினார். இதன் மூலம் முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் (டெஸ்ட் மற்றும் உள்ளூர் போட்டியை சேர்த்து) தொடர்ச்சியாக 8 சிக்சர் நொறுக்கிய முதல் வீரர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். மேலும் 11 பந்துகளில் அரைசதத்தையும் தொட்டார். 

முதல்தர கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த வீரர் இவர் தான். இதற்கு முன்பு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் 2012-ம் ஆண்டு எஸ்செக்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லீசெஸ்டர்ஷைர் வீரர் வெய்னே ஒயிட் 12 பந்துகளில் அரைசதம் எட்டியதே சாதனையாக இருந்தது. அந்த 13 ஆண்டுகால சாதனையை 25 வயதான ஆகாஷ் சவுத்ரி முறியடித்தார்.

அடுத்த 3 பந்துகளில் ஆகாஷ் சவுத்ரி ரன் எடுக்கவில்லை. இறுதியில் 50 ரன்களுடன் (14 பந்து, 8 சிக்சர்) களத்தில் இருந்தார். வெறும் 9 நிமிடத்தில் இச்சாதனையை நிகழ்த்தியது கவனிக்கத்தக்கது. பின்னர் தனது முதல் இன்னிங்சில் பேட் செய்த அருணாசலபிரதேச அணி 27.4 ஓவர்களில் 73 ரன்னில் முடங்கி ‘பாலோ-ஆன்’ ஆனது. 555 ரன்கள் பின்தங்கிய அருணாசலபிரதேசம் ‘பாலோ-ஆன்’ பெற்று தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய முடிவில் 3 விக்கெட்டுக்கு 29 ரன்களுடன் தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory