» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக் கோப்பை: 8-வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார சாதனை!

சனி 14, அக்டோபர் 2023 8:08:04 PM (IST)



உலகக்  கோப்பையின் இன்றையப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களும், முகமது ரிஸ்வான் 49 ரன்களும் எடுத்தனர்.
 
இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைந்து அணிக்குத் திரும்பிய ஷுப்மன் கில் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கினர். 

ஷுப்மன் கில் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய விராட் கோலி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. விராட் கோலி 16 ரன்களில் ஹாசன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின், கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 63 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். 

ரோஹித்தைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் களமிறங்கினார். ஸ்ரேயாஸ் மற்றும் ராகுல் இணை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனது.இறுதியில் இந்திய அணி 30.3 ஓவர்களில் இலக்கை எட்டி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷகின் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும், ஹாசன் அலி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

உலகக் கோப்பையில் 50 ஓவர் போட்டிகளில் இதுவரை 8 போட்டிகளில் (இன்றையப் போட்டியையும் சேர்த்து)  இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியுள்ளன. இந்த 8 போட்டிகளிலுமே இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது ஆதிக்கத்தை இந்தியா தொடர்கிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory