» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தொழிற்சாலையில் அமோனியா வாயு தாக்கி 2 பெண்கள் பலி: உரிமையாளர்கள் கைது
திங்கள் 22, ஜூன் 2026 8:25:35 AM (IST)
திருவள்ளூா் மாவட்டத்தில் தனியாா் மீன் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்வத்தில் தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் மீன், இறால் உள்ளிட்ட கடல் உணவு பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் செயின்ட் பீட்டர் பால் என்ற தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜோசப் ஜெகன் (வயது 48), மோகன் (59) ஆகியோர் நடத்தி வருகிறார்கள். இங்கு இரவு மற்றும் பகல் என இரண்டு ஷிப்டுகளில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் ஒடிசா, பீகார், அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இங்கேயே தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை சுமார் 120 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவியதையடுத்து வாயுவை சுவாசித்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் அடுத்தடுத்து அவர்கள் மயங்கி விழுந்தனர்.
வாயு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல், வாந்தி, தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. சிலருக்கு வாய், மூக்கு, கண் மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது. இதனால் தொழிற்சாலை வளாகத்தில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தால் மயக்கம் அடைந்த 74 தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மஞ்சங்காரணை மற்றும் நெல்லூர் டோல் பிளாசா அருகே உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் மஞ்சங்காரணை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜுமானி ஜுவான் (19), மலோத்தி (20) ஆகிய 2 பெண் தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். இதற்கிடையே சிகிச்சை பெற்று வரும் வடமாநில தொழிலாளர்களை செயற்கை நுண்ணறிவு துறை அமைச்சர் குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. ஷேசாயி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத், எம்.எல்.ஏ.க்கள் விஜயகுமார், ரவி மற்றும் அருண்குமார் ஆகியோர் சென்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களில் 60-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
விபத்து தொடர்பாக போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா? அமோனியா சேமிப்பு மற்றும் பராமரிப்பில் அலட்சியம் ஏற்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அமோனியா வாயு கசிவு விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன், மோகன் ஆகியோரையும், மேலாளர் டேனியல் என்பவரையும் கைது செய்தனர். சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் ராஜீவ்காந்தி மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் அருண் ராஜ், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், மரிய வில்சன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்து தொழிலாளர்களிடம் நலம் விசாரித்தனர். இதேபோல தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
பின்னர் அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் இறால் பண்ணையில் வாயு கசிவு காரணமாக 66 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். 64 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 7 பேர், வேல்ஸ் மருத்துவமனையில் 27 பேர், வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 20 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை விவரங்கள் குறித்து முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். என்னென்ன தேவையோ அதை வழங்க அறிவுறுத்தியுள்ளார்.
அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் இதுவரையில் 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 7 பேர் உயிரிழந்ததாக வந்த செய்தி உண்மையில்லை. 66 பேரில் 60 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவருமே வேறுமாநிலத்தை சேர்ந்தவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அமோனியா வாயு தாக்கிய விபத்தில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
உயிரிழப்பு 5ஆக உயர்வு
இதனிடையே, அமோனியா வாயு கசிவு பதிப்பால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த ஒரு பெண் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு பெண் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 15 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேரும், அரசு மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் என 5 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்: தோவாளையில் சிறப்பு பிங்க் கிராம சபை கூட்டம்!
சனி 20, ஜூன் 2026 5:47:51 PM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம் : டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
சனி 20, ஜூன் 2026 5:19:42 PM (IST)

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!: பொதுக்குழுவில் தீர்மானம்!
சனி 20, ஜூன் 2026 5:05:37 PM (IST)

ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: ஒரே நாளில் சிவகங்கை டூ மதுரைக்கு மாற்றப்பட்ட ஆட்சியர்!
சனி 20, ஜூன் 2026 3:58:57 PM (IST)

இந்து சமய அறநிலையத் துறையின் ரூ.245.85 கோடி திட்டப்பணிகள் ரத்து : அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சனி 20, ஜூன் 2026 3:44:34 PM (IST)

நான் முதல்வன் திட்டப் பதிவுகள் அழிப்பு: தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!
சனி 20, ஜூன் 2026 3:33:26 PM (IST)








