» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 28 தொகுதிகள்: தொகுதிப் பங்கீடு இழுபறி முடிவுக்கு வந்தது!
வியாழன் 5, மார்ச் 2026 10:25:54 AM (IST)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே நீடித்து வந்த தொகுதிப் பங்கீடு இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. இதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி முதல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. இதில் முஸ்லீம் லீக் மற்றும் மமக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் முடிந்த நிலையில், காங்கிரஸுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது.
காங்கிரஸ் தரப்பில் 40 தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை இடங்கள் கோரப்பட்டதால், உடன்பாடு எட்டுவதில் சிக்கல் நிலவியது. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததால் கூட்டணி குறித்த கேள்விக்குறிகள் எழுந்தன.
இந்த இக்கட்டான சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். அதேபோல் திமுக தரப்பில் கனிமொழி எம்.பி., காங்கிரஸ் தலைமையுடன் நடத்திய ஆலோசனைகளைத் தொடர்ந்து சமரசம் ஏற்பட்டு, 28 தொகுதிகள் என்ற முடிவுக்கு இரு தரப்பும் சம்மதம் தெரிவித்தன.
நேற்று மாலை கோவாவில் இருந்து சென்னை திரும்பிய கிரிஷ் சோடங்கரை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்றார். பின்னர் இருவரும் அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர். அங்கு திமுக ஒதுக்கிய 28 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடத்திற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்டனர்.
நிகழ்வில் திமுக தரப்பில் அமைச்சர்கள் எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பொருளாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் கனிமொழி, ஆ. ராசா, திருச்சி சிவா மற்றும் பூச்சி எஸ். முருகன். காங்கிரஸ் தரப்பில் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய செயலாளர் நிவேதித் ஆல்வா மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் எஸ். ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், 18 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுடன் திமுக நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்திய கம்யூனிஸ்ட்: கடந்த முறையைப் போல 6 இடங்கள் வேண்டும் என அக்குழுவினர் பிடிவாதம் காட்டுவதால், இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையிலும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
மக்கள் நீதி மய்யம்: 3 தொகுதிகள் கோரிய நிலையில், ஒரு தொகுதி மட்டுமே வழங்க முடியும் என்றும், அதுவும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்றும் திமுக தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி: இக்கட்சி சார்பில் 2 தொகுதிகள் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதர தோழமைக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாதம்பட்டி ரங்கராஜுக்கு டிஎன்ஏ பரிசோதனை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 5, மார்ச் 2026 12:02:04 PM (IST)

திமுக - காங்கிரஸ் கூட்டணி புதிய வரலாறு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
வியாழன் 5, மார்ச் 2026 11:23:06 AM (IST)

நெல்லை - தாதர் எக்ஸ்பிஸில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: ரயில் நிலைய மாற்றம் அறிவிப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 10:39:30 AM (IST)

அடகுக் கடை நடத்தி 300 பவுன் நகை மோசடி: வாலிபர் கைது, பெற்றோர் தலைமறைவு!
வியாழன் 5, மார்ச் 2026 8:32:45 AM (IST)

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை - நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 5, மார்ச் 2026 8:27:59 AM (IST)

நாங்குநேரி இரட்டைக்கொலை: பழிக்குப்பழி வாங்க அரங்கேறிய பயங்கரம் - திடுக்கிடும் தகவல்கள்!
வியாழன் 5, மார்ச் 2026 8:18:47 AM (IST)









