» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் கொலை: ஆசிரியர் உட்பட 3பேர் கைது!

வெள்ளி 10, மே 2024 11:49:20 AM (IST)

ஊத்தங்கரை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் 54. இவருக்கு லக்ஷ்மி (48) என்கிற மனைவியும் சந்தோஷ் (20), சந்திரகுமார் (16) ஆகிய மகன்களும் உள்ளனர். சந்தோஷ் பி.டெக் படித்து வருகிறார். சந்திரகுமார் பிளஸ் 2 முடித்துள்ளார். வெங்கடேசன் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடமும் பல லட்சம் பணம் பெற்றுள்ளார். 

இந் நிலையில் இவரின் உறவினரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சுன்னாலம்பட்டியை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆசிரியர் கணேசன் என்பவர் அரசு வேலைக்காக பலரிடமும் பணம் பெற்று சுமார் 12 கோடி ரூபாய் வெங்கடேசனிடம் கொடுத்துள்ளார். பணம் பெற்றுக் கொண்ட வெங்கடேசன் பணி நியமன ஆணைகளை கணேசனிடம் கொடுத்துள்ளார். 

சம்பந்தப்பட்டவர்கள் வேலையில் சேரும்போது அது போலியான ஆணை என்பது தெரியவந்தது. இது குறித்து பணம் கொடுத்தவர்கள் கணேசனிடம் கூறியுள்ளனர். வெங்கடேசனிடம் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு ஆசிரியர் கணேசன் பலமுறை அலைந்துள்ளார். வெங்கடேசன் பணம் கொடுக்கவில்லை. இந்நிலையில் வெங்கடேசன் தன்னுடைய இளைய மகனை நீட் தேர்விற்காக தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவதற்காக சென்னையில் விட்டு விட்டு நிலம் கிரயம் தொடர்பாக சேலம் செல்வதாக கூறியுள்ளார். 

அவருடைய மகன்கள் செல்போனில் தொடர்பு கொண்ட போது வெங்கடேசன் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது. வெங்கடேசன் வீடு திரும்பாததால் அவருடைய மகன் தங்களுடைய தந்தை காணவில்லை என்று குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின்படி குன்றத்தூர் காவல்துறை ஆய்வாளர் வேல் மற்றும் காவலர்கள் ஆசிரியர் கணேசனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கீழ் குப்பத்தில் உள்ள தனது அண்ணன் குமரேசன் என்பவருக்கு சொந்தமான கிரஷரில் வைத்து அடித்ததில் வெங்கடேசன் இறந்து விட்டதாகவும் இறந்த வெங்கடேசன் உடலை கிரசருக்கு அருகிலேயே புதைத்துவிட்டதாகவும் தெரிவித்தார். இது குறித்து குன்றத்தூர் போலீசார் ஊத்தங்கரை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

அதன் பேரில் ஊத்தங்கரை காவல்துறை நேற்று இரவு கிரஷரில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். இன்று காலை குன்றத்தூர் காவல்துறை கீழ் குப்பம் பகுதியில் அமைந்துள்ள கிரஷருக்கு ஆசிரியர் கணேசன் உள்ளிட்ட மூவரை அழைத்து வந்தனர். கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் மனைவி லட்சுமி, அவருடைய மகன்களும் வந்தனர். 

சம்பவ இடத்திற்கு ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன் காவல் ஆய்வாளர் கந்தவேல், ஊத்தங்கரை தாசில்தார் திருமால், வருவாய் ஆய்வாளர் கெஜலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஆசிரியர் கணேசன் இறந்த வெங்கடேசன் புதைத்த இடத்தை காட்டினார். அதிகாரிகள் அந்த இடத்தில் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் தோண்டினர். பின்னர் வெங்கடேசன் நின்ற நிலையில் புதைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிரவீனா - சதீஷ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே உடல்கூறாய்வு மேற்கொண்டனர். உடல் கூறாய்வுக்கு பின் வெங்கடேசன் உடலை அவருடைய மனைவியிடம் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை அருகே கலிகுளத்தில் உள்ள வெங்கடேசனுடைய ஊருக்கு எடுத்துச் செல்வதாகக் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory