» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 4:26:53 PM (IST)

கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி காவியன்நகரைச் சேர்ந்த சரவணபாண்டியன் என்பவருடைய மனைவி நிர்மலாதேவி (வயது 54). தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். பல்வேறு பணிகளுக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அவ்வப்போது வந்து சென்றுள்ளார். இவர், கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தன்னிடம் படித்த சில மாணவிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, உங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு நான் சில யோசனைகளை சொல்கிறேன் என கூறி, மாணவிகளை பாலியல் ரீதியில் தவறாக வழிநடத்த முயன்றுள்ளார். இதுசம்பந்தமாக அவர் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அருப்புக்கோட்டை போலீசார், இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பேராசிரியை நிர்மலாதேவியை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவராக இருந்த கருப்பசாமி ஆகியோரும் சேர்க்கப்பட்டு, கைதானார்கள்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் கமிட்டியை அமைத்து அப்போதைய தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கின் விசாரணையை நடத்தி, கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 13-ந் தேதி 1,160 பக்கங்கள் கொண்ட முதல்கட்ட குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

சில மாதங்கள் கழித்து, 2-ம் கட்டமாக 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேருக்கும் எதிராக மொத்தம் 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பல மாதங்களாக நீதிமன்ற காவலில் சிறையில் இருந்த நிர்மலாதேவிக்கு மதுரை ஐகோர்ட்டு 2019-ம் ஆண்டில் ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கின் விசாரணைக்கு அவர் உள்ளிட்ட 3 பேரும் ஆஜராகி வந்தனர். சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் தங்களின் சாட்சியங்களை பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 26-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி பகவதி அம்மாள் தெரிவித்து இருந்தார். அன்றையதினம் முருகன், கருப்பசாமி ஆஜராகினர். ஆனால் நிர்மலாதேவி ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து தீர்ப்பை நேற்று முன்தினத்துக்கு நீதிபதி ஒத்திவைத்திருந்தார்.

அதன்படி நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததை தொடர்ந்து நீதிபதி, இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவியை, இந்திய தண்டனைச்சட்டம் 370 (1), 370 (3), 5 (1)ஏ, 9, 67 ஆகிய 5 பிரிவுகளின்படி குற்றவாளி என தீர்ப்பளித்தார். அதே நேரத்தில் முருகன், கருப்பசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

நிர்மலாதேவிக்கான தண்டனை விவரம் மறுநாள் மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் நிர்மலாதேவியை மதுரை சிறையில் நேற்று முன்தினம் இரவில் போலீசார் அடைத்தனர்.

தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்பதால், மதுரை சிறையில் இருந்து நேற்று நிர்மலாதேவியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச்சென்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு கோர்ட்டில் மதியம் 1 மணி அளவில் ஆஜர்படுத்தினர். பின்பு 2.30 மணி அளவில் நீதிபதி பகவதி அம்மாள் வந்தவுடன், இந்த வழக்கில் வக்கீல்கள் வாதம் தொடங்கியது.

நிர்மலாதேவி தரப்பு வக்கீல் சுரேஷ் நெப்போலியன், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் பிறப்பித்த பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி நிர்மலாதேவிக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என வாதாடினார். அரசு சார்பில் வாதாடிய வக்கீல் சந்திரசேகர், நிர்மலா தேவிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும்படி வாதாடினார். இந்த வாதங்கள் பரபரப்பாக நகர்ந்தன.

சுமார் அரை மணி நேரம் வாதங்கள் நடந்தன. இந்த வாதத்தின்போது கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கூட்டமாக நின்று கவனித்தனர். பின்னர் நிர்மலா தேவிக்கு தண்டனை விவரம் அளிப்பதை நீதிபதி சற்று நேரம் ஒத்திவைத்தார். தொடர்ந்து மாலை 5.10 மணி அளவில், பேராசிரியை நிர்மலா தேவிக்கான தண்டனை விவரத்தை நீதிபதி பகவதி அம்மாள் வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்த குற்றங்களுக்காக நிர்மலா தேவிக்கு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 370 (1)-ன்படி 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5,000 அபராதமும், பிரிவு 370 (3)-ன்படி 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டப்பிரிவு 5 (1) ஏ-ன்படி 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும், பிரிவு 9-க்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப சாதனத்தை தவறாக பயன்படுத்திய குற்றத்துக்காக, சட்டப்பிரிவு 67-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேற்கண்ட சிறை தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.

தீர்ப்பில் ஏக காலம் என குறிப்பிட்டு இருப்பதால், அதிகபட்ச சிறை தண்டனையான 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை நிர்மலாதேவி அனுபவிக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த வழக்கில் மொத்தம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை நிர்மலாதேவி சிறையில் இருந்த நாட்களை தண்டனை காலத்தில் கழித்துக்கொள்ளும்படியும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory