» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: பக்தர்கள் பரவசம்!!!

செவ்வாய் 23, ஏப்ரல் 2024 10:19:36 AM (IST)



மதுரை சித்திரைத் திருவிழாவில் லட்சக் கணக்கான பக்தர்களின் கோவிந்தா முழக்கத்துடன் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மேலும் விழாவில் மீனாட்சி பட்டாபிஷேகம், திருக்கல்யாணம் என முக்கிய விழாக்கள் நடைபெற்றதன் தொடர்ச்சியாக நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிலையில், அழகர்கோவிலிலிருந்து மதுரை வந்தடைந்த அருள்மிகு கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டழைக்கும் எதிர்சேவை நிகழ்வு கோ. புதூர் மூன்றுமாவடியில் நேற்று அதிகாலை நடைபெற்றது. சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக தங்கப் பல்லக்கில் அழகர்மலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரை நோக்கி புறப்பாடாகினார். 

இரவு பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி பகுதிகளில் பக்தர்கள் வரவேற்பை எதிர்கொண்டு சுந்தரராஜன்பட்டியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் மறவர் மண்டகப்படிக்கு திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு எழுந்தருளினார். நேற்று அதிகாலையில் அங்கிருந்து புறப்பாடான கள்ளழகர் வழிநெடுகிலும் பக்தர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு, அதிகாலை 5 மணிக்கு மதுரை மாநகரின் எல்லையான கோ.புதூர்  மூன்றுமாவடியை வந்தடைந்தார். 

அங்கு பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டழைக்கும் எதிர்சேவை நிகழ்வு நடைபெற்றது. மேலும், கள்ளழகர் முன்பாக பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்கவும், கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியபடியும் கருப்பணசாமி, அனுமன் வேடமிட்ட பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளம் கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் தமுக்கம்  அருள்மிகு கருப்பணசாமி கோயிலில் ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருளினார்.  

பின்னர், அங்கிருந்து வைகை ஆற்றுக்கு புறப்பட்ட கள்ளழகர், இன்று அதிகாலை தங்க குதிரையில் பச்சை பட்டு உடுத்தி பக்தர்களின் கோவிந்தா முழக்கத்துடன் வைகை ஆற்றில் இறங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory